தனி நீதிமன்றம் கேட்கும் தேரர்கள்: ஶ்ரீலங்கா அதிபருக்கு மகஜரும் கையளிப்பு

தேரர்களின் வழக்குகளை விசாரிக்க தனியான நீதி மன்றம் தேவை. அத்தோடு , பௌத்த நீதிமன்றத்தை நிறுவுவதற்காக சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ; கோரி ராமாஞ்ஞ மகா பீடத்தினால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இன்று மாலை 3 மணியளவில் பௌத்தா லோக மாவத்தையில் அமைந்துள்ள விபஷண சாவனா மத்திய நிலையத்திலிருந்து அமைதிவளிப் பேரணியாக ஆரம்பித்த பௌத்த பிக்குகளின் பேரணி 4 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை அடைந்தது.

அதன்பின்னர் கோமல்பேர சோபித தேரர் தலைமையிலான குழு தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தது.

இந்த பேரணியானது சுமார் 250 வரையிலான தேரர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றதுடன் தேரர்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்வதற்கென தனியான நீதி மன்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனக்கோரியும் அதற்கான சட்ட ரீதியான அதிகாரத்தை பெற்றுத்தர கோரும் வகையிலான பதாகையை ஏந்திய வண்ணம் அமைதிவளிப்பேரணி ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தை அடைந்தது.

குறித்த மகஜரில்,

தேரர்;களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமையானது அவர்களை குற்றங்கள் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்களின் ஒழுக்க மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட தேரர்களுக்கென்று நீதிமன்றம் ஒன்று தேவைப்படுகின்றது. ஆகவே , தேரர்களுக்குரிய சட்ட விதிமுறைகளை வகுக்கவும் தேரர்களின் ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளவும் நீதிமன்றம் ஒன்றை நிறுவவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இதற்கமைய இரு தினங்களில் இது குறித்து முடிவுகளை மேற்கொள்தல் தொடர்பாக குறித்த அமைப்பை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் கோமல்பேர சோபித தேரர் தெரிவித்தார்.

Updated: August 29, 2018 — 7:18 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *