டென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.!

டென்மார்க்கில் நடைப்பெற்ற தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வு.!

தேசத்தின் குயில்கள் பாடல் போட்டி. டென்மார்க்கில் 29.09.18 கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழீழ மக்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது.

பொதுச்சுடரினை கிறீன்ஸ்ரெத் நகர மாலதி தமிழ் கலைக்கூட ஒருங்கினணப்பாளர் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசிய கொடியினை டென்மார்க் கலைபணபாட்டு ஒருங்கிணைப்பாளர் எமது தமிழீழ தேசிய கீதத்தின் நடுவே ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தியாகச் செம்மல் திலீபனின் திருஉருவ படத்திற்கு தேசநிலா இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஈகசுடரினை ஏற்றி வைத்தார். டென்மார்க் மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஒரு மாவீரனின் சகோதரும் மலர்வணக்கம் செலுத்தினர் . அதன் பின் வந்திருந்த அனைத்துப் பொது மக்களும் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களுக்கான ஈகச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், செலுத்திய நிகழ்வுடன் பாடல் போட்டி ஆரம்பமாகியது.

சுவிஸ்லார்ந்து நாட்டில் இருந்து வருகை தந்த வைத்தியரும் பாடகருமான கரோலின் அவர்களும் , டென்மார்க்கில் வசித்து வரும் பாடகரும் வயலின் இசை கலைஞருமான தன்யா அவர்களும் நடுவர்களாக பங்கேற்றனர் .

டென்மார்க்கின் இசை குழுவான தேச நிலா இசைக்குழுவினருடன் சேர்ந்து சுவிஸ்லார்ந்து நாட்டிலிருந்து வந்த கீபோர்ட் இசைக்கலைஞரும் இணைந்து இசை வழங்க பாடகர்கள் தெரிவு ஆரம்பமாகியது.

முதலில் நடுவர்கள் இருவரின் உணர்வு பூர்வமான அழகான பாடலுக்கு அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் போட்டி நிகழ்வு ஆரம்பமாகியது.

மழலைகள் பிரிவு, மத்திய பிரிவு , மேற்ப்பிரிவு, இணை பாடல் என நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயதிற்கு உட்பட்டவர்கள் மழலைகள் பிரிவிலும் , பதின்மூன்று வயதிலிருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் மத்திய பிரிவிலும் , அதற்கு மேற்பட்ட வயதினர் மேற்ப்பிரிலும் பற்கேற்றனர். எல்லாப்பாடகர்களும் தமிழ்த் தேசியத்தின் உணர்வையும் மாவீரர் வீரத்தையும் அவர் தியாகத்தையும் எம் தேசிய தலைவனின் ஆளுமையான வழிநடத்தலையும் அங்கு குழுமியிருந்த மக்களின் மனக்கண் முன் தம் உணர்ச்சி பூர்வமான பாடல்களாலும் பாடிய விதத்தினிலும் கொண்டு வந்தனர்.

தமிழ் எம் தாய் மொழி என்றாலும் எம் சிறார்கள் அதனை இரண்டாம் மொழியாக பயின்றாலும் தமிழ் தான் எம் மொழி என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துவது போல் தமது அழகான தமிழ் உச்சரிப்பினால் நிலைநிறுத்தி சென்றனர். அதே போல் மத்திய பிரிவிலும் மேற்ப்பிரிவிலும் போட்டியிட்ட ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதனை தம் உணர்ச்சி பூர்வமான பாடல்களால் அடையாளம் இட்டுக்காட்டினர்.
மழலைகளுக்கான தெரிவு முடிந்ததும் பார்வையாளர்கள் சலிப்பையாமலும் அதே வேளையில் நடுவர்கள் கலந்துரையாடி முடிவினை எடுப்பதற்கும் விடப்பட்ட இடைவேளையில் கீறின்ஸ்ரெத் மாலதி கலைக்கூடத்தினைச் சேர்ந்த மாணவிகள் அழகிய நடனம் ஒன்றினை வழங்கினர்.

அதே போல் அடுத்து வந்த இடைவேளையிலும் செவ்வந்தி அவர்கள் தியாகிதீலிபன் பற்றி உரை நிகழ்த்திச் சென்றார். அப்படி வழங்கப்பட்டப் இடைவேளையில் தங்கள் முடிவுகளை எழுதி காகித உறையினுள் வைத்து ஒட்டி அதனை பார்வையாளர்கள் மூவரிடம் ஒப்படைத்தனர்.

இறுதியாக ஒவ்வொரு பாடல்ப்பிரிவிலும் பங்கேற்ற அனைத்துப்பாடகர்களையும் அரங்கத்திற்கு அழைத்து அவர்களுக்கான நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடுவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக் கேட்க்கப்பட்ட போது அவர்கள் ஒவ்வொரு பாடகரும் தாளம் ,பாவம் பாடிய விதத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதனைத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பங்கேற்ற அனைத்து போட்டியாளரும் அரங்கத்தில் நிற்க “ நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கை பாடல் அனைவரின் கைதாளத்திற்கு நடுவில் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் தமிழீழ தேசிய கொடி அதற்க்குரிய மரியாதையுடன் இறக்கப்பட நிகழ்வு இனிது நிறைவேய்தியது.

Updated: October 3, 2018 — 3:09 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *