ஆட்சியாளர்கள் மாறினாலும் உரிமைக் குரல் ஓயாது : யாழ். பல்கலை மாணவர்கள் !!

 

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் நிலமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று திங்கட்கிழமையுடன் (29) 610 ஆவது நாளாகும். இதனை முன்னிட்டு தமக்கான தீர்வைத் தாமதமின்றி பெற்றுத் தருமாறும், தமது மீதி நிலங்களை விடுவிக்குமாறு கோரியும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கி கவனயீர்ப்பு நடைபயணமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த நடைபயணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நடைபயணம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து முல்லைத்தீவு அரச அதிபரிடம் ஐ.நா விற்கான மனுவொன்று கையளிக்கப்பட்டது. குறித்த மகஜர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களூடாக வழங்க வேண்டுமென விரும்பிய கேப்பாப்புலவு மக்கள் ஐ.நா விற்கான மனுவை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஷ்ணமீனனிடம் வழங்கியிருந்தார்கள்.

எமது நிலம் எமக்கு வேண்டுமெனக் கோரித் தொடர்ச்சியாகப் போராட்டம் நடாத்தி வரும் நிலையில் மழையினால் நாம் பல்வேறு அசெளரியங்களுக்குள்ளாகியுள்ளோம். நாம் படும் கஷ்ரங்களை அரசாங்கமும், எமது தமிழ் பிரதிநிதிகளும் பாராமுகமுகமாகவுள்ளமை வேதனையளிப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக ஒன்றியத்தலைவர் கி. கிருஷ்ணமீனன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கேப்பாப்புலவு மக்களின் நிலம் மிக விரைவில் விடுவிக்கப்படவேண்டும். இதற்காக எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

மேலும் ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல் ஓய்ந்துவிடப் போவதில்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Updated: October 30, 2018 — 1:12 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *