போராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.!

தமிழ்மக்கள் மீது  இனவாத சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய  ஈழ நாதம்  நாளிதழுக்கு   புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய வாழ்த்து செய்தி..

போராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.!

கோயில் மணியாகிக் கேட்போர் செவிகளிலே

பாயும் உயர்நாதப் பாட்டே!

விடுதலைக்குப்

போராடும் தேசத்துப் புலர்பொழுதே!

உருள்கின்ற

தேராய் உலாப்போகும் திகழ்வடிவே.!

கண்ணெதிரே

நாற்றாக நேற்றுன்னை நட்டோம்

வளர்ந்தின்று

பூத்துள்ளாய், என்னேயுன் பூரிப்பு

தினம்பதியும் தேர்த்தடமாய் வாசல் தெரியும் படியாகப் போர்க்குரலைப் பாடிப் பெரிதாய் நிமிர்கின்றாய்

தீயுண்டும் மாளாத ஜீவமொழி உனது

வாய்கொண்டு பாடும் வரலாறுக்குண்டு

எல்லாவழியும் இடியுண்டும்

நீ துளிர்த்துப்

பொல்லாதார் வாய்க்குப் பூட்டிட்டாய்

பொய்யுரைத்துக்

கொல்வோர் குரல்வளையைக் கிழித்தாய்

எம்  நிலத்தின்

வல்லமையை வைய வரம்பினிலே நட்டாய் நீ

ஊதி அணைத்திடலாம் உரிமைக் குரலையென நீதிக்கெதிரானோர் நினைத்தார்

நீயதனை

மோதி; அவர் நினைவை முறியடித்தாய்

உயிருறுஞ்சும்

வேதனையை: தீமுனையில் வெந்துபடும் சாக்குரலை

கொண்டு சென்று எங்கும் கொட்டிப் பரவிவிடக் கண்டதனை வையம் கலங்கித் துடிக்கிறது ஆலையில்லாவூரில் இலுப்பைப்பூ ஆகாமல் பாலை நிலத்திலுள்ள பசுஞ்சோலை ஆனாய் நீ

எட்டும் வரையெட்டி இருட்கரத்தை நீ வெட்டித்

தொட்டு விடுதலைக்குத் தோள் கொடுத்தாய்

வானத்தில்

வந்தருளும் வெய்யோன் வளர்கதிர்போல்

ஒளிவெள்ளம்

தந்தருளும் நாதத் தமிழிதழே வாழிய நீ

உனக்கும் எமக்குமுள்ள உறவு

தாய்பிள்ளைக்

கணக்குப்போல் வந்த கருவுறவு

ஆதலினால்

அந்த உறவதையே ஆதாரமாய்க் கொண்டு

சொந்த மகவுன்னைச் சோடித்தோம்

உந்தனுக்கு பால்கொடுத்தோர் வாழி

பகலிரவாய்க் கண்விழித்து

காலெடுத்து நீ நடக்கக் காட்டுகின்றோர் வாழியவே பிள்ளையெனை உன்னைப் பெற்றவரும்

நாளெல்லாம்

அள்ளியெடுத்துன்னை அணைப்பவரும் வாழியவே.

கவியாக்கம் :- புதுவை இரத்தினதுரை 

Updated: February 2, 2019 — 11:24 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *