ஈழத்தமிழனின் சுதந்திர தினம் எப்போது ??

இது ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் என்னும் கிடைக்கவில்லை !!

இன்று இலங்கை ஐக்கிய இராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற நாள். இலங்கை ஐக்கியராட்சியத்திடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலிருந்து ஈழத் தமிழர்கள் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டார்கள் என்ற வரலாறும் ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையர்கள் இது எங்கள் நாடு. இது எங்கள் தேசியம். இது எங்கள் கொடி. எங்கள் சுகந்திரப் பாடல். இது எங்கள் படைகள் என்று வாழ்த்துக்களை பாடுகிறார்கள். இலங்கை சுகந்திர தினம் என்பது சிங்களவர்களால் கொண்டாடப்படும் நாள்.

உலகத்தில் எங்குமே யாருக்குமே சுகந்திரம் கிடைத்ததைப்போல தெரியவில்லை. மக்கள் எங்கும் ஏதோ ஒரு அதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இதைப்போலத்தான் ஈழத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்காமல் அந்நிய ஆட்சிக்குள் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள்.

முற்றிலும் அந்நியமான இலங்கை சுகந்திரதினத்தில் ஈழத் தமிழர்கள் விலகியிருக்க நினைக்கிறபோதும் இவை பெருந்தேசியமாக அதன் அலைகளாக அதன் படைகளாக ஈழத் தமிழர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டேயிருக்கிறது. இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடும்படி வற்புறுத்தப்படுகிறது. ஒடுக்குமுறை வாழ்க்கைக்குள் இப்படி ஒரு ஒடுக்குமுறை.

அந்நிய படைகளாலும் அரசாலும் ஈழத் தமிழ் அரசு கலைப்பட்ட பொழுது ஈழத் தமிழர்களின் சுகந்திரம் இழக்கப்பட்டது. சிங்கள அரசுகளிடம் இலங்கை என்ற இராட்சியத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்ட பொழுது மீண்டும் விடுதலை வேண்டி ஈழத் தமிழினம் போராடத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல இலங்கை அரசிடமிருந்து தமிழர்கள் விடுதலை வேண்டிய அவசியம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

ஈழத்து மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தப்பட்டது. சொல்லணாத் துயரங்களின் ஊடாக போராட்டப் பாதையில் யுத்த்தின் பாதையில் மக்கள் பயணித்திருக்கிறார்கள். இலங்கை அரசின் அடக்குமுறைப் போக்குகளாலும் உலகின் அடக்கு முறைப் போக்குகளாலும் பறிபோன விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டங்களும் என்று விடுதலை வேண்டிய கோரிக்கை பல வகையில் கிளர்ந்திருந்தது. எனினும் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை!

விடுதலை கேட்டுப் போராடிய ஈழத் தமிழ் மக்களை மேலும் ஒடுக்கி அழித்து உரிமைகளை பறித்து இன அழிப்பை செய்து வருகின்றன சிங்கள அரசாங்கங்கள். விடுதலைக்குப் பதிலாக அழிவையும் பயங்கரங்களையும் தமிழ்மக்கள்மீது திணித்து வருகின்றன.

சாக்காடாகவும் லட்சம் உயிர்கள் புதைந்த மண்ணாகவும் மாறிவிட்ட ஈழத் தமிழர்களின் வாழ் நிலத்தில் மீண்டும் தனது சிங்களப் பெருந்தேசியவாத தந்திரங்களை வளர்த்து வருகிறது இலங்கை அரசு. ஈழத் தமிழர்களின் சகல உரிமைகளும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் புகைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வெறும் இனமாக அவலங்களை ஒடுக்குமுறைகளை பயங்கரங்களை எதிர்கொள்ளும் ஒரு இனம் தனது அடிமைத்தனம் குறித்தும் அதற்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் குறித்தும் இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இன்றும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தங்கள் சுகந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பதையே அடக்குமுறையுடன் அரசு நடைமுறைப்படுத்துகிறது. மக்கள் விரும்பி சுகந்திரத்தை உணர்ந்து தாமாக கொண்டாட வேண்டிய சுகந்திரதினத்தை இராணுவம் கொண்டாட நிர்பந்திக்கிறது. வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் தமிழர்கள் இலங்கை சுகந்திரதினத்தை கொண்டாட வேண்டும் என்று இராணுவம் கடுமையான அழுத்தங்களை கொடுக்கிறது.

வீடு வீடாக கொடிகளை கொடுத்து ஏற்ற வேண்டும் என்றும் கடை கடையாக கொடிகளை கொடுத்து ஏற்ற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவதுடன் தமிழர் பகுதிகளில் இராணுவமே சுகந்திரதினத்தை கொண்டாடுகிறது. முள்ளிவாய்க்கால் என்ற ஈழத்தமிழன அழிவு நிகழ்ந்த ஆற்றில் வெட்டி பாய்ச்சப்பட்ட குருதி இன்னும் காயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இழப்புகளின் மேல் இழப்புக்களும் ஏமாற்றங்களும் இருண்ட நாட்களும் என்று காலத்தை எப்படி கழிப்பது என்று ஈழத்தமிழ் மக்கள் ஏங்குகையில் யாருக்குச் சுகந்திரதினம்? என்ற மாபெரும் கேள்வி எழுகிறது.

யுத்தம் தந்த வெற்றியால் பூரிப்படைந்த அரசும் அதனுடைய படைகளும் அந்த அரசையும் அதன் நடவடிக்கையையும் ஏற்றுக் கொண்ட மக்களும் இந்த நாடு முழுமையாக தங்களுக்கே சொந்தமாகிவிட்டது என்றும் வெள்ளைக்கார்கள் உடையாத நாட்டை தம்மிடம் தந்து விட்டு சென்றனர் என்றும் இந்த நாளைக் கொண்டாடக் கூடும்.

இலங்கை அரசும் அதன் கூறுகளும் சிங்கள அடையாளத்துடன் ஈழத்தமிழனத்தை கடுமையாக எச்சரிக்கின்றது. இந்த விழாக்களும் இதற்கான உரைகளும் எதிர்காலம் பற்றி மேலும் மேலும் அச்சத்தையே தரப் போகின்றன. தமிழ் இனத்தையும் அதன் கனவையும் போராட்டத்தையும் யாரும் புரியவில்லை என்று கூற முடியாது. நன்கு புரிந்து கொண்டு ஆழமாக கால்களை உள்ளே வைத்துக் கொண்டே தமிழ் இனத்தின் விடுதலை முனைப்புக்களை ஒடுக்கியிருக்கிறார்கள். தமிழ் இனத்திற்கு சுகந்திரம் மறுக்கப்படுகிறது.

சிறைகளிலும் தடுப்புக்களிலும் முகாங்களிலும் தமிழ் மக்களை தடுத்து வைத்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்ய அரசு வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறது. தனது அரசின் அதிகாரம், அரசியல், வியாபார ஒழுங்கு என்பவற்றுக்குப் பொருத்தமாக சில தமிழ்மக்கள் ஜனாதிபதியின் கால்களில் வீழ்த்தப்பட்டு இன்றைய நாளில் விடுவிக்கப்படக்கூடும். சுகந்திரம் பற்றிய புதிய அர்த்தங்கள் ஏடுத்துரைக்கப்படலாம்.

பத்தாயிரம் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறியிருந்த பொழுதும் அதற்கு அதிகமாக பதினையாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் குடும்பத்தவர்கள் கண்ணீரோடு அலைகிறார்கள். முறிகண்டி முதல் புதுக்குடியிருப்பு வரை பல பகுதிகளில் மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாங்களிலும் வெளியிலும் தங்கியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

மக்களின் காணிகள் பலவற்றில் படையினர் இராட்சியம் புரிகின்றனர். அவர்களே இன்று வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை தலைவிதியை இராணுவத்தினரே தீர்மானிக்கின்றனர். எதற்கெடுத்தாலும் இராணுவம் தலையிட்டு கண்காணிக்கப்பட்டு வாழும் இராணுவ ஆட்சியில் யாருக்குச் சுகந்திரம் கிடைத்திருக்கிறது ?

ஜனநாயக சோசலீச குடியரசு ஜனாதிபதிகளின் வரலாறு முழுவதும் இந்த அடக்குமுறை கனகச்சிதமாக செய்யப்பட்டு வருகின்றன. பண்டா முதல் ஜெயவர்த்தன முதல் சிறிமா முதல் இன்றைய ஜனாதிபதியின் குடும்பம் வரை ஈழத் தமிழரின் விடுதலை வாழ்வை விழுங்கும் கதைகள் தொடர்கின்றன. எதையும் செய்ய முடியாத நிலையில் தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

ஈழத் தமிழ் மக்கள்மீது மாபெரும் இன அழிப்புப் போரை நடத்திய இலங்கை அரசு மீது யுத்தக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் உலகெங்கிலுமிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன. ராஜபக்சவின் முகத்தை நோக்கி கைகள் நீட்டப்படுகின்றன.

ஈழத் தமிழ் மக்களுக்கு தான் வழங்குவதாகச் சொன்ன தீர்வை கூட வழங்காமல் சாக்குப் போக்குச் சொல்லி தொடர்ந்து இழுத்தடித்து அரசியல் செய்து வருகிறார் மகிந்த ராஜபக்ச.

அறுபதாண்டுகளாகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு சுகந்திரம் கிடைப்பதென்பது இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மீதான முதல் நடவடிக்கையிலிருந்தே ஆரம்ப கூடும்.

இலங்கை அரசால் அதன் மக்களால் சுகந்திரதினம் கொண்டாடப்படும் இன்றைய நாள் இலங்கை அரசும் அதன் ஜனாதிபதியும் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்கள் என்றும் இனப்படுகொலையை செய்தவர்கள் என்றும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

எங்களை நாங்களாக இருக்க விடுவதும் தொல்லைகள் ஏதும் தராமல் இருக்க விடுவதுமே எங்களுக்குப் பெரும் விடுதலை. எங்களை கொல்லாமல் மிரட்டாமல் எங்கள் தெருவில் நாங்கள் திரிய எங்கள் வீட்டில் நாங்கள் வாழ எங்கள் பிள்ளைகளை சிறையை திறந்து வெளியில் விட்டு எங்கள் கிராமங்களை எங்களிடம் தந்தால் அதுவே பெரும் சுகந்திரம்.

எங்களுக்குத் தேவையானது ஐக்கிய இலங்கையிடமிருந்து சுகந்திரம்.

இந்தத் சுகந்திரதினம் என்பது சிங்கள பெருந்தேசிய வாதத்தை கொண்டாடும் நாள் என்பதே ஈழத் தமிழர்களால் உணரப்படக்கூடியது. தவிரவும் இந்த அடிமை வாழ்வில் இன்றைய சுகந்திரதினத்தை தமிழர்கள் அறியவில்லை. இன்றைய சுகந்திர தினநாளும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்கமுறைக்கான வடிவங்களை அலைகளை பெருக்கி அச்சுறுத்துகிறது.

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது ?? பெப்ரவரி 04 தமிழர்களுக்கு கரிநாளே !!

ஈழத் தமிழர்களுக்கு என்று முடியும் இந்த அடக்குமுறை வாழ்வு ? நாங்கள் எப்பொழுது விடுதலை பெறுவோம் ?

விழா விழா எழுவான் தமிழன் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்..

Updated: February 4, 2019 — 11:11 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *