முல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு..

முல்லையில் முஸ்லீம்களை மட்டும் குடியேற்ற குழு: சிவமோகன் சம்மதம், சாந்தி எதிர்ப்பு..

 

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியமர்த்துவது தொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களும் இதில் அங்கம் வகிக்கிறார்கள்.

ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் இறுதிநாளான (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, முல்லைத்தீவில் 2 ஆயிரம் முஸ்லிம் மக்களிற்கு வீடு அமைக்க காணிகள் இல்லை, அதை வழங்க இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சாந்தி சிறிஸ்கந்தராசா மாத்திரம் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.

“மாவட்டத்தில் 9 ஆயிரம் தமிழ் மக்கள் காணி இல்லாமல் இருக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு இனத்திற்கு மட்டும் காணி வழங்க எப்படி பரிந்துரைப்பது?. முஸ்லிம்களிற்கு காணி வழங்க எந்த இடத்தை பரிந்துரைக்கிறீர்கள்?“ என கேள்வியெழுப்பினார்.

கூழாமுறிப்பில் காணி வழங்கவுள்ளதாக அரசாங்க அதிபர் பதிலளித்தார்.

நான்கு பக்கமும் நிரந்தரமாக தமிழ்மக்கள் வாழும் பூர்வீக நிலத்தில் மற்றொரு கலாசாரத்தையுடைய மக்களை குடியமர்த்துவதை அனுமதிக்க முடியாது என சாந்தி எம்.பி எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச் காணி வழங்க திட்டமிட்டுள்ளோம். எமது திட்டத்திற்கு சிவமோகன் எம்.பி இணக்கம் தெரிவித்து விட்டார். ஏனையவர்கள்தான் எதிர்க்கிறார்கள் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார்.

இதை ஆராய குழு அமைக்க வேண்டுமென சாந்தி சிறிஸ்காந்தராசா தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தலைமையில், அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன் ஆகியோர் குழுவில் அங்கம் வகிப்பார்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.

குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை ஓரங்கட்டுகிறீர்களா என சாந்தி சிறிஸ்காந்தராசா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரும் குழுவில் இணைக்கப்பட்டார்.

Updated: February 17, 2019 — 7:17 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *