இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா?

இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சகல மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா கூட்டத் தொடரை இலக்கு வைத்த இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் அனைத்துத் தரப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் உயர் மட்டக்குழு ஒன்று சிறிலங்காவிலும், தமிழர் தாயகப் பகுதிகளிலும் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத் தரப்பும், தமிழ் மக்களும் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாடி பிடித்துப் பார்ப்பதற்கு ஐ.நா. அதிகாரிகள் முற்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஜெனீவாவில் வரப்போகும் தீர்மானம் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையுமா? பொறுப்புக் கூறல் நிலைமாறுகால நீதி போன்ற விடயங்களில் சிறிலங்காவுக்கு உண்மையாகவே அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்குமா? என்பதற்கான பதிலைத்தான் நாம் தேட வேண்டியிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை அமெரிக்கா இல்லை. வழமையாக சிறிலங்கா குறித்த தீர்மானங்கள் அமெரிக்காவினால்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவை கடும் நிர்ப்பந்தத்துக்குள்ளாக்குவது போலக் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானங்களில் இருக்கும் “காரம்” பின்னர் குறைக்கப்படுவதுதான் கடந்த கால அனுபவம். சிறிலங்காவே இணை அனுசரணை வழங்கும் அளவுக்கு தீர்மான வாசகங்கள் கடந்த இரண்டு சந்தர்ப்பங்களில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அதனைக் கூட, சிறிலங்கா நடைமுறைப்படுத்தவில்லை என்பது சர்வதேசத்தின் கவனத்துக்குரிய விடயம்.

இம்முறை அமெரிக்காவின் இடத்தை பிரித்தானியா எடுத்துக்கொள்கின்றது. சிறிலங்கா குறித்து புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக பிரித்தானியா இப்போது அறிவித்திருக்கின்றது. பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி, மொன்டனேக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் இணைந்தே இந்தப் பிரேரணையைக் கொண்டுவரப்போகின்றன. இந்த ஐந்து நாடுகளும்தான் இப்போது சிறிலங்கா விவகாரத்தைக் கையாளப்போகும் பிரதான நாடுகளாக இருக்கின்றன. இதற்குத் தலைமை தாங்கும் நாடு என்ற முறையிலேயே பிரித்தானியா புதிய தீர்மானததைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கின்றது.

“இலங்கையில் நல்லிணக்கத்தையும்? பொறுப்புக் றலையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்” என்ற பெயரில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பொறுப்புக் கூறல், நிலைமாறுகால நீதி என்பவற்றை உள்ளடக்கிய பிரேரணை ஒன்று 2015 இல் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான காலக்கெடு 2017 இல் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. வரும் மார்ச் மாதத்துடன் அந்தக் காலக்கெடு முடிவுக்கு வருகின்றது. அதனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலேயே புதிய பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பிரித்தானியா தலைமையிலான நாடுகள் திட்டமிட்டுள்ளன.

மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் என்பன அவற்றின் இராஜதந்திர நகர்வுகளில் முக்கியமானவையாக உள்ளன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதனைவிட தமக்கு ஆதரவான நாடுகளைப் பாதுகாப்பதில் அவற்றின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதுதான் யார்த்தம். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்குலகுக்குச் சார்பான ஒன்று என்பது வெளிப்படை. 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறிலங்கா மீதான அழுத்தத்தை மேற்குலக நாடுகள் பெருமளவுக்குக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. அல்லது அந்த அழுத்தங்கள் பெயரளவிலேயே இருந்துள்ளன. ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் கூட பெரளவிலானதாகவே இருந்துள்ளனவே தவிர, ரணில் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை – சங்கடத்தைக் கொடுப்பதை அவை தவிர்த்துக்கொண்டேயிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் “மறப்போம். மன்னிப்போம்” என ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் வைத்து வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார். போரில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஆயுதந் தாங்கிய எதிர்த்தரப்பை சமர் ஒன்றின் போது கொல்வது போர்க் குற்றமல்ல. அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவதும், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களைக் கணாமற்போகச் செய்வது போன்றனதான் போர்க் குற்றங்களாக ஐ.நா. வரையறுத்துள்ளது. இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் தொகை ஒரு லட்டசத்துக்கும் அதிகம். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான். கைதாகிக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 8 ஆயிரம். இவை அனைத்தையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியுமா?

ஐ.நா.வில் தொடர்ந்தும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தமிழர்களின் இந்தக் கோரிக்கைகள் நீர்த்துப்போய்விடும் என்பது அரசாங்கத்தின் கணக்கு. மேற்குலகும் இதனைத்தான் விரும்புவதாகவே தெரிகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைத்தான் விரும்புகின்றதா?

போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளுக்காக எந்தவொரு இராணுவ வீரரையும் தண்டனைக்கு உள்ளாக்கப்போவதில்லை என்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு. “மறப்போம். மன்னிப்போம்” என்பதன் மூலம் இதனைத்தான் ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார். மைத்திரிபால சிறிசேனவோ இதனை வெளிப்படையாகவே கூறிவருகின்றார். ஆக, பொறுப்புக்கூறல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மீண்டும் ஒரு கால அவகாசத்தை வழங்கிளாலும் கூட, சிறிலங்கா அரசாங்கம் அதனைச் செய்யப்போவதில்லை.

இதனைத் தெரிந்திருந்தும் கூட, கால அவகாசத்தை வழங்கும் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. “ஐ.நா.வின் கண்காணிப்பைத் தொடர்ந்தும் வைத்திருத்தல்” என சுமந்திரன் இதனை நியாயப்படுத்துகின்றார். “வரப்போகும் பிரேரணை கடுமையானதாக இருந்தால் மட்டுமே நாம் அதனை ஆதரிப்போம்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் உட்பட முக்கியமான தேர்தல்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளப்படும் நிலையில், கடுமையான தீர்மானம் ஒன்றை மேற்கு நாடுகள் கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனைவிட, தீர்மானம் கடுமையானதாக இருக்கின்றதா இல்லையா என்பதை மதிப்பிடப்போவது யார்? ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்ளப்படும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்புத் தலைமை செயற்படுமா என்பது அடுத்த கேள்வி!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலுள்ள மிகப்பெரிய பலவீனம், குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த நாடு குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதனால்தான் கடந்த நான்கு வருடங்களில் சிறீலங்காவினது ஒத்துழைப்பையும் பெறலாம் என்ற நம்பிக்கையில் பிரேரணையின் வாசகங்களில் காணப்பட்ட கடுமையை மேற்கு நாடுகள் பெருமளவுக்குக் குறைத்தன. அப்படியிருந்தும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை. இப்போது, கடுமையான தீர்மானம் வந்தால் அதனை நாம் ஆதரிப்போம் என மாவை கூறுகின்றார். மென்மையான தீர்மானத்தையே நடைமுறைப்படுத்தாத சிறிலங்கா கடுமையான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமா? அதுவும் இந்த தேர்தல் ஆண்டில்!

ஆக, மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகளை நிறைவேற்றுதில் அர்த்தமிருக்கப்போவதில்லை என்பதுதான் கடந்த வருடங்களில் நாம் படித்துக்கொண்ட பாடம். அதனால், மாற்று வழிகளைப் பற்றி சந்திக்க வேண்டிய தருணம் இது. ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது, இதற்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற வாதம் இப்போது பல தரப்புக்களாலும் முன்வைக்கப்படுகின்றது.

தமிழர்களின் பிரதிநிதிகளாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கூட்டமைப்பு இதற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க வேண்டும். அதற்கான இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பு இவ்விடயத்தில் செயற்படாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய அமைப்புக்கள், தாயகத்திலிருந்து இதே கருத்துடன் செயற்படும் அமைப்புக்களுடன் இணைந்து இதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகத்துக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. இந்த நேரத்திலாவது தனிநபர் வாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு இதற்காக நாம் இணைந்து செயற்படவிட்டால், வரலாறு எம்மையும் மன்னிக்காது!

Updated: February 23, 2019 — 7:16 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *