யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் எழுச்சி..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுக்காமல் போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் வட தமிழீழம் யாழ்.பல்கலைக்கழத்தில் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.

எதிர்வரும் 16ம் திகதி வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளி வரை இக்கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் கண்டன பேரணிக்கு அனைவரும் ஆதரவை வழங்கி சர்வதேதத்திற்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நிலைப்பிட்டினை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

பொங்கு தமிழ் நிகழ்வுக்கு பின்னர் மற்றொரு பொங்கு தமிழாக யாழ்ப்பாணச் சமூகம் நிமிர்ந்தெழுந்து உரிமைக் கோரிக்கை விடுக்கும் நிலை ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக மேற்படி எழுச்சி நிகழ்வை ஒழுங்குபடுத்தும் மாணவர் சமூகம் தெரிவிக்கையில்,

எமது தமிழ் மாணவர் சமூகத்தினர் காலம் காலமாக தமது கல்வியுடன் தேசிய போராட்டங்களை ஒழுங்கு செய்து அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் சக்தி படைத்தவர்கள் என்பதற்கு பொங்கு தமிழ் சான்றாகும்.

அதனைப் போல் தமது கல்வியையும் பொருட்படுத்தாது முழு வீச்சில் எதிர்வரும் 16ம் திகதி போராட்டத்தை ஒழுங்கு செய்து மக்களின் அரசியல் பிரமுகர்களின் சிவில் சமூகத்தினரின் வர்த்தகர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரதும் பேராதரவுடன் மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

எனவே தமிழ் உறவுகள் உணர்வாளர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சரியான பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துதல் மற்றும் இது வரையிலும் எமது இனப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என சர்வதேதத்திற்கு ஒருமித்த குரலில் தெரிவிக்க எமது எதிர் கால சந்ததியினரான மாணவர்களின் போராட்டம் வலுப்பெற ஒன்றிணையுமாறு மிகவும் உரிமையோடும் அன்பாகவும் அழைத்து நிற்கின்றனர்.

Updated: March 9, 2019 — 10:52 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *