எழுவர் விடுதலையில் இன்னும் ஏன் தாமதம்.?

7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப் போவதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார் .

`ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் தமிழக ஆளுநர். பேரறிவாளன் மற்றும் நளினி தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும், இதுவரை 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி விடுதலை செய்து விடுவார்கள் என்று சிறையில் இருந்த உறவினர்களுக்குத் தேர்தல் அறிவித்தும் அமைதி காத்து வருவது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, “தமிழக அரசு தீர்மானம் இயற்றி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்தத் தீர்மானத்தின் முடிவு எடுக்காமல் அமைதி காத்து வருகிறார். நீதிமன்றமே விடுதலை செய்யலாம் என்று கூறிவிட்டது. தமிழக அரசும் விடுவிக்கக் கோரி தீர்மானம் இயற்றி விட்டது. அப்படி இருந்தும் ஏன் விடுவிக்கவில்லை எனத் தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இன்னும் விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்கள் என்ற காரணத்தையாவது  தெரிவிக்க வேண்டும். அப்படியான எந்தக் காரணமும் தெரிக்கவில்லை. இதற்கு மேல் அமைதி காப்பது நல்லது அல்ல. என்பதைக் கருத்தில் கொண்டு தீர்மானம் இயற்றியபின் ஏன் விடுவிக்கவில்லை எனக் கோரி வழக்கு தொடர உள்ளோம்” என்றார்….

Updated: March 19, 2019 — 9:43 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *