வழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா !!

அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நான் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளரின் படுகொலை மற்றும் நபர் ஒருவரின் கைது போன்றவற்றிற்கு நான் பொறுப்பானவன் என்ற ரீதியில் என் மீது வழக்குத்தாக்கதல் செய்துள்ளனர். மேலும் என்னிடம் நட்டஈடு கேட்டு சிவில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் அவற்றை இரத்துச் செய்வதற்கான முயற்சிகளை சட்டத்தரணிகள் ஊடாக மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள மக்களும், அதேபோல நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள இலங்கைப் பிரஜைகளும் பாரியளவான ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்கியிருந்தார்கள்.

ஏனென்றால் இவை அரசியல் ரீதியான நோக்கத்திற்காக செய்யப்பட்டவை. இதற்கு முன்னர் குறைந்தது 10 தடவைகள் அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளேன்.

அப்போது அந்த தரப்பினர் எந்தவொரு சிவில் வழக்கையும் நட்டஈட்டையும் கோரியிருக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தப்படுத்தி செய்த செயலாகவே நான் கருதுகின்றேன்.

இதற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர்ந்த சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும் அதேபோல இலங்கையிலுள்ள சில தரப்பினரும் இந்த விடயத்துக்குப் பின்னால் உள்ளனர்.

அத்துடன் கவலைக்குரிய விடயமாக, கலிபோர்னியாவிலுள்ள கொன்சல் அலுவலகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இப்படியான கீழ்த்தர அரசியலைச் செய்வது மிகவும் அநீதியாகும். அந்த காலகட்டத்திற்குள் நான் பாதுகாப்புச் செயலாளராக மேற்கொண்ட பணிகளையும், நாட்டையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Updated: April 13, 2019 — 5:00 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *