அகிம்சை ஆயுதம் அன்னை பூபதி !!

அன்னை பூபதியின் நினைவு நாள் – அன்னை பூபதி ஒரு தாய் !


தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.

நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் தூக்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் துக்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூடஇ தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன

1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான “பிரிக்கேடியர் சண்டேஸ்” பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

நிலைமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர்.

இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் “அன்னம்மா டேவிட்” தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி ‘பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்’ என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள்.

உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.

அன்னை பூபதியின் நினைவுநாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என்றும் நினைவு கூரப்படுகிறது.

3 .11 .1932 அன்று பூபதி அம்மா கிரான் என்னும் ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்தது நாவற்கேணி என்ற சிற்றூராகும்.இச் சிற்றூர் மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் நாவற்கேணி விளங்கியது.மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தின் முதல் மாவீரர்களான லெப். ராஜா (பரமதேவா), வீரவேங்கை ரவி (வாமதேவன்) ஆகியோர் உட்பட சில போராளிகள் நாவற்கேணி ஊரில் தங்கியிருந்தனர்.

இதனால் இவ்வூர் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் பெற்றுள்ளது. பூபதி அம்மா அவர்களுக்கு ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் இருந்தபோதும், ஆண் பிள்ளைகளில் இருவர் சிங்கள இராணுவத்தினரால் அழிக்கப்பட்டனர். கடைசி மகன் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு கண்ணதாசன் என்னும் பெயருடன் களமாடியதையும் இங்கு குறிப்பிடுகின்றோம் .

தமிழர்களுடைய அமைதிவழிப் போராட்ட வரலாற்றில்,தமிழ்ப் பெண்களின்பங்கு தேர்தலில் வாக்குப் போடுவதில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இக் காலங்களில் தமிழ்ப்பெண்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை. ஆனால் கருவி ஏந்திய போராட்டமாக களத்தில் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் நின்றபோது தமிழ்ப்பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

இக் காலத்தில்தான் சாதாரண தமிழ்க் குடும்பப்பெண்ணான அன்னை பூபதி அவர்களும் அமைதி வழிப்போரில் ஈடுபட்டு, தற்கொடைச்சாவின்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் சார்பான பலத்தை மேலதிகமாக பெற்றுக்கொடுத்தார் இதன்மூலம் தமிழ்ப் பெண்கள் அதிகளவாக போராட்டத்தில் பங்கு பற்றிய காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தைக் குறிப்பிடமுடியும். தமிழ் அன்னையர்கள் உட்பட்ட தமிழ்ப் பெண்கள் மக்கள் சக்தியாக, பக்க பலமாக விடுதலைப் போராட்டத்தில் அணிதிரண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்தோடு இணைந்திருந்த தமிழ் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்ததையும் அதற்குப் பிறகு கருவி ஏந்திய போராட்டமாக விடுதலைப் பாதைமாறியபோது, தமிழ்மக்களின் பூரண ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இருந்ததையும் இங்கு பதிவு செய்கின்றோம். இதனால்தான் மட்டக்களப்பு மக்கள் ஒன்றுதிரண்டு தமது தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கு போராடமுற்பட்டனர்.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் சக்தி பின் பலமாக விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்தப்பட்டதையும்,சிங்களப் படையினரின்,இந்தியப்படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் போராளிகளை மக்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதையும் ஒவ்வொரு மாவீரரின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது.

அறிவாளர்கள்,சமூக சேவையாளர்கள்,அரசசேவையாளர்கள்,பாமரமக்கள் என பல்வேறு பட்ட பிரிவினர் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமோக அதரவு இருந்ததை நாட்டுப் பற்றாளர்களின்வரலாற்றுக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.இது எல்லோராலும் அறியப்பட்ட விடயமாகும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசியவிடுதலை இயக்கத்தை பாதுகாத்து நின்ற மக்கள் தம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கும், அரசியல் பதவிகளுக்கும் ஆசைப்படவில்லை இவர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவே மறைந்தும், மறையாமலும் வாழ்கின்றார்கள்.

. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான நாட்டுப்பற்றளார்களை நாம் இழந்திருக்கின்றோம். தாய்மொழியை நேசித்த,தாய் நாட்டின் மகிமை உணர்ந்து அதன்மீது பற்றுக்கொண்ட இவர்கள் தங்களை இழந்து விடுதலைக்கு பலம் சேர்த்தனர்.

அறிவாற்றல் மிக்கபலர் இனப்பற்றோடு வாழ்ந்து தங்களை தாய்மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து நாட்டுப் பற்றாளர்களாக என்றும் எமது மக்களின் மனங்களில் மறையாது இருப்பதையும் உணர்கின்றோம்.

வயது முதிர்ந்ததாக இருந்த பலர்,தேசியத் தலைவர் காலத்தில் இளைஞர்களாக இருக்கவில்லையென்று ஏங்கிய பல சம்பவங்களைப் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான அனைத்து நாட்டுப் பற்றாளர்களையும் இந்நாளில் நினைவு கூர்ந்து,அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களைப் பெற்றெடுத்த வீர அன்னையர்களுக்கு தலைசாய்த்து, தமிழ்ழன்னைசார்பான வணக்கத்தையும் இந் நாளில் தெரிவித்துக்கொள்வோம்.

எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும்,தமிழீழத் தனியரசில் வாழவேண்டும் என்ற உணர்வான எண்ணத்தில் விடுதலைப் புலிகளோடு கைகோர்த்து களத்தில் நின்றபோது,சிங்களப் படையினரின் இன அழிப்பு நடவடிக்கையில் தாய்மண்ணில் சாவடைந்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் இந்நாளில் தலைவணங்குகின்றோம்.

தொப்புள்கொடி உறவாக,தாய் தமிழகத்தில் அமைதி வழிப்போரில் ஈடுபட்டு தமிழீழப் விடுதலைப் போராட்டத்திற்கு வலு சேர்த்து,தமிழருக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெறவேண்டும் என்ற உறுதியான இலட்சியத்திற்காக தம்மை அர்பணித்த அனைத்து இனப்பற்றாளர்களையும், இந் நாளில் நெஞ்சினில் நினைவாக ஏந்தி வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

. பூபதி அம்மாவின் தற்கொடை தமிழர்களின் விடுதலைப் போருக்கு பலம் சேர்த்தது. குடும்பபாசம், குடும்பபற்று என்பதற்கப்பால் இனப்பற்று,மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவற்றுடன் தேசியத் தலைவர் மீதுபற்று,என்பவையும் இணைந்ததாக இந்தியப் படையினருக்கு தமிழ்மக்கள் சார்பான பாடத்தைப் புகட்டியிருந்தது.

உறுதியோடு இலட்சியத்தையடையும் உயர்ந்த குறிக்கோளோடு களத்தில் நின்ற விடுதலைப்புலிப் போராளிகள் தாம் அனைவரும் வீரச் சாவடைந்தலும் தமிழீழ விடுதலைப்போர் ஓயாது அதனை மக்கள் வென்றேடுப்பர்கள் என்றே, எப்போதும் எண்ணினார்கள். என்றும் பதவிக்காக,சுயநலத்துக்காக,வசதியான வாழ்வுக்காக போராளிகள் ஏங்கியதில்லை ,தேசியத் தலைவரும் ஏங்கியதில்லை என்பதனை இந்தியப் படையினருடனான போரின்போது வெளிப்படுத்தினார்கள்.

எண்ணற்ற போராளிகள், எண்ணற்ற மக்கள் சிந்திய செங்குருதியினால் சிவந்த மண்ணில் இருண்ட வாழ்க்கையில் எழுந்து நின்ற மக்கள் எப்போதும் தேசியத் தலைவர்மீது அளவற்றபற்று வைத்திருந்தார்கள் என்பதை அன்றும் இன்றும் கண்டு கொண்டிருக்கிறோம்.

விடுதலைப் போராட்டத்தில் எழுந்தவள் அன்னை பூபதி.
தமிழர் வரலாற்றில் இணைந்தவர் அன்னை பூபதி.
மறைந்தும், மறையாத மக்கள் மனங்களில் வாழ்பவர் அன்னை பூபதி
தமிழீழத்தின் மக்கள் சக்தி அன்னை பூபதி.

உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமது வாழ்வோடு, தமக்கென்றோர் நாடு வேண்டும் என்ற உணர்வோடு, ஒலிக்கின்ற குரல் ஒருமித்து உரக்கின்றபோது உலகின் குரலும் இணைந்து உருவாகின்ற நாடாக தமிழீழம் என்ற எமது தாய் நாடு அமையும்.
உலகத்தை எம் பக்கம் திருப்புவதும், உலகத்தை எம் முடன் இணைப்பதுவும்,

தமிழர்களின் ஒற்றுமையான போராட்டம் சாதிக்கும்.

Updated: April 19, 2019 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *