தமிழ் கிராமமொன்றையே வெளியேற்ற துடிக்கும் ஶ்ரீலங்காவின் வனவள பாதுகாப்புப் பிரிவு

வடதமிழீழம்: மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி கிராமத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் விவசாயம் செய்துவருவதுடன், குடியேறி வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனவள திணைக்களம் கூறியுள்ள நிலையில் மக்கள் நிற்கதியாகியுள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த மக்கள் அப்பகுதியில் குடியேறி அதன் பின்னர் அதன் அருகில் உள்ள அரச காணிகளை துப்பரவு செய்து தோட்டச் செய்கைகளை மேற்கொண்டு பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீளக் குடியேற்றப்பட்டனர்.

குறித்த தோட்டக் காணிகளில் வருமானத்திற்காக மிளகாய் , தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணிப்பகுதிக்குள் வனவள திணைக்கள அதிகாரிகளினால் எல்லைக்கள் இடப்பட்டுள்ளதுடன்

குறித்த பகுதியில் பயிர்செய்கை மற்றும் தோட்ட செய்கையில் ஈடுபடும் மக்களை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக குறித்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வன வள திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தமது வாழ்வாதர தொழில் மற்றும் தாம் கால காலமாக வாழ்ந்து வந்த காணிகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதால் செய்வதறியாது நிற்கின்றனர் குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள். பாரம்பரியமாக தாங்கள் பயிர் செய்து வாழ்வாதரத்தை தேடும் எமது காணிகளை நிரந்தரமாக தங்களுக்குப் பெற்று தருமாறு தோட்ட செய்கையில் ஈடுபடும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated: May 11, 2019 — 6:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *