காயாத கண்ணீர் ! – மிதயா கானவி

ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ.மருந்துகளோ இருக்கவில்லை பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது.

மருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருதன.

அந்த சோகத் தணல் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது.அப்போது அனுமதிக்கும் பகுதியில் நின்ற மருத்துவப்போராளி அதிக மக்கள் காயமடைந்து கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அனுப்பிப்பினார்.

சத்திர சிகிச்சை அறையை விட்டு வெளியில் வருகின்றேன் தறப்பாளினால் போடப்பட்டும்,சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டு.கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் நடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் தெரிய போடப்பட்டிருந்தாள்;.காயமடைந்த பலரையும் தாண்டி அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலையும் தாண்டி அம்மாவின் அருகில் செல்கின்றேன்.. இறந்தவர்களின் உடலைக்கூட அகற்ற முடியாத சூழல்.வெடியோசைகள் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன.யாரின் உயிரிற்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.

காயமடைந்திருந்த அம்மா ‘என்ர பிள்ளை பிள்ளை’என்றே முனகிக்கொண்டிருந்தாள். குருதி அதிகளவு வெளியேறி உடம்பு கண்டி சிவந்திருந்தது.கை கால் குளிர்ந்து நடுங்கியது.மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உட்பாவாடையும் அணிந்திருந்தாள்.கைகளில் மட்டும் ஒரு சிறிய படம் வைத்து இறுகப்பற்றியிருந்தாள்.அதை என்னிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள். முடியவில்லை. உடல் பலம் இழந்திருந்தது. ஏவ்வளவோ கத்த முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவில்லை.நான் அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானேன் மாமரக்கொப்பொன்றில் சேலைன் பொத்தலைக் தொங்க விட்டுமூன்று சேலைன்களை வென்புளோன் ஊசியுடாக வேகமாக ஏற்றி கொண்டிருக்க.மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கினாள்.. முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தென்பு வர ‘தங்கச்சி எனக்கு பக்கத்தில் முத்த பிள்ளையின் உடல் சிதறிட்டு என்ர மூன்று வயது பிள்ளையைக்காணவில்லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்’ என அம்மா பல முறை கூறினாள். ஆனாலும் அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இருக்கவில்லை . எல்லோருமே அந்த நிலைமைதான். என்னாலும் நின்று கதைக்க முடியவில்லை உயிருக்கு போராடும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. எல்லா இடங்களிலும் இதே ஓலம் தான்.


அம்மாவை சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்ல முனைந்த போது அம்மா வரமறுத்தாள். ஏன்ர பிள்ளை வந்தால் தான் நான் வருவேன் என்று அம்மா கெஞ்சினாள் .அப்போது சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெட்பம் எம்மை அனுகவேயில்லை பல நூறு மக்களின் கண்ணீராலும்,செங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.

படார் என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகை மண்டலமாகியது கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை . இந்த சத்ததுடன் எம்முடன் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த மருத்துவப்போராளி செவ்வானம் அக்காவின் உயிர் அடங்கியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை. தொடையில் காயமடைந்து கொண்டுவரப்பட்ட ஒரு வரின் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தி கொண்டிருக்கையில் சரிந்துவிழுந்த செவ்வானம் அக்காவைப்பார்த்து “ஐயோடொக்டரைகாப்பாற்றுங்கோ என்று அவர் அலறிக்கொண்டு இருந்தார்.
நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது.

வேதனை கோபம் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீரை துடைத்துகொண்டு மீண்டும் எம் கடமைக்குத்தயாரானோம்அம்மாவின் சேலைன் போத்தலில் இருந்த சேலைனும் நிலத்தில் ஊற்றியது.நிமிர்ந்து பார்த்தபோது தான் தெரிந்தது சேலைன் போத்தலும் காயப்பட்டிருந்தது. நள்ளிரவைத்தாண்டியும் சிறிய சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.இரவைப் பகலாக்கி உறக்கத்தை தொலைத்து உணவுகூட இன்றி அங்கு நின்ற மருத்துவ ஊழியர்கள் மனித நேயத்துடன் தங்களால் இயன்ற வரை உழைத்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஒரு சிறிது நேர அமைதியின் பின் மீண்டும் மருத்துவமனையில் ஆரவாரம் மரண ஓலங்கள் தொடர்ந்தன.;அய்யா அய்யா அது என்ன அநியாயம் ஓர் பெண் விகாரமாய் தலையிலே கைகளை வைத்தபடி அழுதாள். அவள் அருகில் சிறு காயத்துடன் மருத்துவமனை வந்த சிறுவன் அசைவற்று கிடந்தான். . இன்னொருவர் இறந்து போன தன் பச்சிளம் பாலகனை மடியில் வைத்து கதறினார். இன்னும் சிலர் சடலங்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் இடையில் தமது உறவுகளை தேடினார்கள்.

.அம்மாவிற்கு குடலில் ஈரலில் சிறுநீரகத்தில் பாரிய காயங்கள் இருந்தமையால் சத்திர சிகிச்சையின் பின் அவசர சிகிச்சை விடுதிக்கு அனுப்பப்பட்டாள். அம்மா கண்விழித்தபின்பும் பிள்ளையை தேடப்போவதாக விடச்சொல்லி கெஞ்சிக்கொண்டேயிருந்தா.

பிள்ளையின் பெயச்சொல்லுங்கள் மனிதநேய உதவி செய்யும் குழுக்களிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேடித்தருவார்கள் என்று கூறிக்கொண்டபோதே அடிமனதில் வலித்தது.
அம்மா சொன்னா ‘நான் காயத்தோடையும் பிள்ளையைத்தேடித்திரிஞ்சன். மயங்கினாப்பிறகுதான்ஆரோ இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கினம்” எ ‘சரி அம்மா நீங்க உயிரோட இருந்தா தானே பிள்ளையை தேடலாம் என்றேனா மனதை கல்லாக்கிகொண்டு .

இரவோடு இரவாக வந்த செய்தியால் கும் இருட்டிலும் மனம் வெளித்தது கொடூரமான அந்த வேளையிருலும் எங்களிற்கு அந்தச் செய்தி தேனாய் இனித்தது “ஜ.சி.ஆர்.சி. யின் கப்பல் வருகுதாம்” ‘ ஏத்தனையோ நாட்களாக நோயாளரை ஏற்ற வருவதாக சொல்லி இலகு காத்த கிளி போல ஏமாந்த நாட்களைப்போல்தான் ‘நாளை வருமோ’ என்று மனம் அங்கலாத்தது.மருத்துவமனையில் கூட காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதே மீண்டும் காயமடைந்து இறந்த பரிதாப நிலை எத்தனை கண் முன்னே நடந்தேறியது. அதைவிட மருந்துகளும் முடிவடைந்திருந்தன.அப்போது சிறு ரோச் வெளிச்சத்துடன் வந்த அவ் மருத்துவமனை பொறுப்புவைத்தியர் ‘ஐந்நூறு பேரை மட்டும் தான் அனுப்பலாம் அதற்கு ஏற்றவாறு முக்கியமானவர்களை தெரிவு செய்வோம்’ என்று நோயாளர்களின் ரி;க்கற்றுகளைப்பார்வையிட்டு உறுதி செய்தார்.

நேரம் அதிகாலை மூன்று மணி மக்கள் சந்தோசமாக வாழ்ந்த அழகிய கிராமத்தில் தான் அந்த மருத்துவமனையிருந்தது ஆனாலும் விடியலை கூற சேவல்கள் இருக்கவில்லை.மாறாக வெடியோசைகள்தான் நித்திய பூசையாக முழங்கியதுகப்பல் வருகின்றது என்ற செய்தி பரவலடைய நான் முந்தி நீ முந்தி என்று அனுமதியைப்பெறுவதற்கு முண்டியடித்தார்கள்.ஆனாலும் மூன்றுமாத கால இடைவெளியில் வரும் கப்பலில் அவசர நோயாளர்களைஅனுப்புவதற்கே இடம் போதவில்லை மற்றவர்களை எவ்வாறு…………
சிவப்பு பேனாவால் அடையாளப்படுத்தி வைத்திருந்த அந்த அம்மாவின் ரிக்கற்றை வைத்தியரிடம் கொடுத்தேன் பதிலுக்கு காத்திராமல் “அம்மா வயிற்றின் உள்ளுறுப்புக்களில் பாரிய காயம் கட்டாயம் மேலதிக சிசிச்சைக்காக கப்பலில் போக வேண்டும்’ ”என்றேன் முறைத்துப்பார்த்த அம்மா இயலாத காயத்துடனும் கட்டிலை விட்டு எழுந்து என்ர பிள்ளை இல்லாம நான் போகமாட்டன் செத்தா பரவாயில்லை’என்றாள் திடமாக. எனக்கு அம்மாவின் முகத்தைப்பார்க்க உள்ளம் நடுங்கியது.பட்டென நெஞ்சில் வலித்தது பக்கத்தில் இருந்த நோயாளி காலைப்பிடித்து ‘”என்பிள்ளைக்கு இரண்டு காலிலும் முறிவு அந்த அம்மாவின் இடத்திற்கு என்னை அனுப்புங்கோ’“ என கெஞ்சவும் பட்டென கடந்த உண்மையிலேயே அந்த நோயாளிக்கும் மேலதிக சிகிச்சை தேவைதான். அதைவிட உயிருக்காக போராடும் பலர் இருக்கிறார்கள்.அவர்களிற்கே கப்பலில் இடம் போதாமல் இருந்தமையால் அவர்கள் மனங்களைக்கல்லாக்கி ஆறுதல் கூற கூட காலமின்றி அவர்களைக் கடந்து அடுத்த நோயாளியைப்பார்க்கச் செல்கின்றோம். மருத்துவர்களின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலமது.

ஏறிகணைகள், சன்னங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன.அதற்கு பயந்து பயந்து, பதிந்து, நிமிர்ந்து படுத்த நாட்களெல்லாம் கடந்து போய் இறுதி நாட்களில் விதியிருந்தால் நடக்கும் என்று அந்த சூழலில் இருந்த பெரும்பாலானவர்களின் மனங்களில் பதிந்திருந்த உண்மையாகியது. நேரம் காலை ஒன்பது ஆகியது.மருத்துவமனை மேலும் பரபரப்பானது. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையிருந்த இடத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டியில் கடற்கரை வரையும் நோயாளர்களை ஏற்றச் சென்று பின்னர் சிறிய படகு ஒன்றில் i.cr.cயின் பெரிய கப்பலில் நோயாளர்களை ஏற்றினார்கள்.இதற்குள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய நோயாளர்கள் படும் வேதனை சொல்லமுடியாது.முதலில் படுக்கையாளர்களை ஏற்றினார்கள்.

அம்மாவால் எங்களிற்கு பெரிய தலையிடியாக இருந்தது.இருந்த இடத்தை விட்டு கப்பலுக்குப்போக மறுத்தாள்.எவ்வளவு சொல்லியும் அளவற்ற பிள்ளைப்பாசம் முழுஇதயம் பூராவும் இருந்தமையால்அவளுக்கு வேறொன்றயும் சிந்திக்க முடியவில்லை.பிள்ளை வர வேணும் அது மடடும் தான் சொல்லுவாள். பல மணி நேர சத்திரகிட்சையில் காப்பாற்றப்பட்ட உயிர் அம்மா .போக மறுத்தால்; மேலதிக சிகிச்சையின்றி சில நாட்களில் இறந்து போவாள் என்பது நாம் தெரிந்த உண்மை அம்மா நீங்கள் போகாவிடடால் உங்கள் உயிரை இனி எங்களால் காப்பாற்ற முடியாது போய்விடும். மருந்தில்லை. போடுவதற்கு சேலைன் இல்லை. நீங்கள் பிள்ளையுடன் உயிருடன் வாழ வேண்டு மென்றால் கட்டாயம் போகவேண்டும் இதைவிட எங்களால் ஒன்றும் சொல்லமுடியாது.அம்மாவின் நிலமை நெஞ்சைப்பிழந்தாலும் எங்களாலும் என்ன செய்ய முடியும்.மீண்டும் ‘அம்மா பிள்ளை வந்தால் கட்டாயம் அடுத்த கப்பலில் அனுப்புவம்……….அடுத்த கப்பலே வரமல்போவதை நாம் தெரிந்திருக்கவில்லை.

அம்மாவும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை என்னை அருகில் அமர்த்தி கைகளை இறுகப்பற்றிக்கொண்டு ”என் கணவர் பிள்ளைக்கு பத்து மாதத்தில் இறந்திட்டார்.எனக்கு என்ர சொந்தம் அவன் தான் அவன் இல்லாட்டி என்ர உயிர் தேவையில்லை. முத்தவனும் கண்முன்னே போய்விட்டான்.அவனை என்னிடம் அனுப்புங்கோ’என்று தன்னிடம் உள்ள ஒரே ஒரு சொத்து பிள்ளையின் படம் என நீட்டினாள்.

நாளை நானும் இறக்கலாம் என்ற எண்ணத்துடன் மறுப்பாக தலையசைத்து ‘”அம்மா இதனை கொண்டு போங்கோ பெயரைத்தாங்கோ’” என்று எழுதிக்கொண்டேன் அம்மா போக சம்மதித்தது சிறிது சந்தோசமாக இருந்தது. அம்மாவிற்கு போட்டு அனுப்புவதற்கு ஓர் உடுப்பு கூட இருக்கவில்லை. ஓர் சிறிய பெட்சீற் துண்டால் தான் மூடியிருந்தாள். கண்கள் மரத்துவிட்டன. இப்போது அழுகை கூட வருவதில்லை எத்தனை சோகங்களை நேரில் பார்த்தது ‘”கெதியண்டு அனுப்புங்கோ நேரம் போகுது” நோயாளரை தூக்கும் உதவியாளர்கள் அவசரப்படுத்தினார்கள்.கையிலிருந்த மருத்துவமனை உடுப்புக்களும் முடிந்து போய்விட்டது.பெண்ணின் மானத்தைக்காத்து எப்படி அனுப்புவது என்று தெரியாது தவித்தோம் அம்மாவின் வயிறு பெருத்து வீங்கியிருந்தது இறுக்கமான உடுப்பு போடமுடியாது.யாரிடமும் உதவி கேட்க முடியாது. ஏல்லோருக்கும் அதேநிலைதான்.

வேகமாக சத்திர சிகிச்சைக்கூடத்தினுள் நுளைந்தேன் அங்கு நாங்கள் போட வைத்திருந்த(சத்திரசிகிட்சைசெய்யும் போது மாற்றும் சட்டை) கவுணை எடுத்து ஓடி வந்து வேகமாக அம்மாவிற்கு போட்டு அனுப்பினோம் சரி பிழைக்கு அப்பால் அம்மாவிற்கு உடுப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ந்தோம் பிள்ளையள் என்ர பிள்ளையை எப்படியும் அனுப்புங்கோ’ என வழிக்குவழி சொல்லி போனாள். தூக்கி வாரிப்போட்டது. நான் அங்கு நின்ற நாள்வரை அப்படியொரு பிள்ளை கிடைக்கவேயில்லை.பொன்னுச்சாமி உசாந் உயிருடன் இருப்பானா? யாராவது அறிந்தீர்களா?

இன்று காலச்சக்கரத்தின் கடுகதி வேகத்தால் யாரும் கனவிலும் நினைக்காத ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடிந்தது .அந்த அம்மா உயிருடன் இருப்பாளா? மகன் இல்லாவிட்டால் உயிர் வாழ்வாளா? என்ற கடந்த கால பல நியமான நினைவுகளால் அடிக்கடி அரிகப்படுவதனால் அந்தரித்துப்போகின்றேன் . இன்றும் தூக்கம் வரவில்லை. கடந்த நாட்களில் நின்ற எதிர்பார்ப்புக்களை போர் பறித்துச்சென்று வெகு நாட்களாகி விட்டது.ஆனால் அவளது நினைவுகளை பறிக்கவோ அழிக்கவோ கோரயுத்தத்தால் முடியவில்லை.அவளின் காயாத கண்ணீருடன் எதிர்பார்ப்பின் கண்கள் இன்னமும் வழிந்தவண்ணமாக உள்ளன.

மிதயா-கானவி

Updated: May 13, 2019 — 10:00 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *