அவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் புகுந்து அதிரடியாக மேற்கொண்ட சோதனைகளும், பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அறவழிப்போராட்டங்களை ஒடுக்குவதற்கும், இம்மாத நடுப்பகுதியில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்கும் இராணுவம் முற்படுகின்றதா என்ற கேள்வியையும் இச்சம்பவம் எழுப்பியிருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இராணுவத்துக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் இவ்வாறுதான் பயன்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இவ்வளவு விரைவாக – இந்தளவுக்கு அப்பட்டமாக இதனை இராணுவம் செயற்படுத்தும் என்பதுதான் எதிர்பார்க்கப்படாததது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு என ஏப்ரல் 21 இல் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளான ‘ஐ.எஸ்.’ அமைப்பின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்றே அவசரகாலச் சட்டம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்படுவதை எதிர்க்காத நிலையில், அது ஏகமனதாக நிறைவேற்றியது. வழமையாக அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கும் ஜே.வி.பி. இம்முறை அதனை எதிர்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்ததுடன், பாராளுமன்றத்திலும் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டிருந்தது. ‘ஐ.எஸ்.’ தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியிருந்த நிலையில், அவசரகாலச் சட்டத்தின் அவசியமும், அவசரமும் பாராளுமன்றத்தினால் ஏற்கப்பட்டிருந்தது.

அவசரகாலச் சட்டத்தின் சில விதி முறைகளே நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டிருந்தது. அவை கடுமையானவை எனவும், அதனை மேலும் நீடிப்பதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், பாராளுமன்றத்தில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதும், பின்னர் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு உருவாகும் போது, அரசாங்கத்தை விமர்சிப்பதும் அவர்களுடைய வழமையான தந்திரோபாயம்தான். அதனைத்தான் இப்போதும் சுமந்திரன் செய்வதாகவே தோன்றுகின்றது. கூட்டமைப்பின் இந்த நிலைமை அரசாங்கத்துக்கும் புரியும். அதனால்தான் தம்மீது கூட்டமைப்புத் தலைமை அவ்வப்போது வெளிப்படுத்தும் விமர்சனங்களை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

வரவு – செலவுத் திட்டங்கள் பாராளுமன்ற விவாதத்துக்கு வரும் போது அதனைக் கடுமையாகத் தாக்கி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாற்றுவது கூட்டமைப்பின் வழமையாகவிருக்கும். இறுதியில் அரசாங்கம் எதிர்பார்ப்பதைப் போலவே அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் வாக்களிப்பார்கள். அதேபோன்ற ஒரு நிலைதான் அவசரகாலச் சட்டத்துக்கும் ஏற்படுமா என்பதை இந்த மாத இறுதியில் அதனை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு வரும்போதுதான் நாம் பார்க்க முடியும்.

வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தது போல 2015 முதல் நிபந்தனைகளின்றி அரசாங்கத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. அதிலும் கடந்த ஒக்டோபர் 26 ஆல் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்கு கூட்டமைப்பு கடுமையாக உழைத்தது என்பது பகிரங்கம். சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சியிலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை சுமந்திரன் நடத்தியிருந்தார். அதில் அவர், ஐ.தே.க.வுக்கு ஆதரவாகவே கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்ற அபிப்பிராயம் உள்ளது. அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதல்ல இங்கு கேள்வி. என்ன நிபந்தனைகளை முன்வைத்து ஆதரிக்கின்றீர்கள் என்பதுதான் கேள்வி.

கூட்டமைப்பின் தலைமைக்கும் அரசாங்கத் தலைமைக்கும் இடையிலான நெருக்கம் அனைவருக்கும் தெரியும். உத்தியோகப்பற்றற்ற முறையில் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகத்தான் கூட்டமைப்பு செயற்படுகின்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு ரணில் வசம் இருந்தாலும், நடைமுறையில் கூட்டமைப்புத்தான் அதனைச் செயற்படுத்துகின்றது. இது ஒரு உத்தியோகப்பற்றற்ற ஏற்பாடு. அடுத்த தேர்தலை இலக்காகக்கொண்ட ஏற்பாடாக இது இருக்கலாம். அதாவது, அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக கூட்டமைப்பினரின் செல்வாக்கைப் பாதுகாப்பதற்கான ஒரு உபாயம் இது.

இதேபோல, அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கும் முடிவை எடுக்கும் போதும், அதனுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை நிபந்தனையாக கூட்டமைப்பு முன்வைத்திருக்க முடியும். குறிப்பாக, வடக்கு, கிழக்கில் அறவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கோ, மாணவர்களை அச்சுறுத்தவோ அதனைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு உத்தியோகப்பற்றற்ற ஏற்பாட்டை கூட்டமைப்பு செய்திருக்கலாம். ‘ஐ.எஸ்.’ அமைப்பை ஒடுக்குவதற்காக என இராணுவத்துக்கு அதிகாரங்களைக் கொடுக்கும் போது, அது தமிழ் மக்கள் விடயத்திலும் பயன்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். கடந்தகால வரலாறு எமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம் இது!

1970 களின் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவை அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தன இவ்வாறுதான் பெற்றிருந்தார். குறுகிய காலத்துக்கென்றே அது அப்போது கொண்டுவரப்பட்டது. பின்னர் இன்றுவரை தொடர்கின்றது. பல தமிழ் இளைஞர்கள் இன்றும் சிறைகளில் வாட அதுதான் காரணம். இப்போது, ஜெயவர்த்தனவின் வாரிசான ரணில் விக்கிரமசிங்க அரசரகாலச் சட்டத்தைக் கொண்டுவர, நிபந்தனைகளின்றி கூட்டமைப்பு அதனை ஆதரிக்கின்றது. விளைவு பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

இப்போது அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்தன் நோக்கம் வேறு. ஆனால், வடக்கில் இராணுவத்தினரின் நகர்வுகளும், கடந்த ஒரு வார காலமாக அங்கு இடம்பெறும் நிகழ்வுகளும் படையினர் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, வடக்கில் இடம்பெறும் சோதனைகள், தேடுதல்கள், பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகள் என்பன வடக்கை தொடர்ந்தும் இராணுவ மயமாக வைத்திருக்கும் அரசின் நோக்கத்தைத்தான் வெளிப்படுத்துகின்றது. அத்துடன், அச்ச நிலை ஒன்றை உருவாக்கி முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை தடுப்பதும் அதன் நோக்கமாக இருக்கலாம். இது குறித்து கூட்டமைப்பின் தலைமை என்ன செய்யப்போகின்றது?

-தினக்குரல்

Updated: May 14, 2019 — 7:21 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *