முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் !

தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது.

27 சர்வதேச நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து இனப்படுகொலை அரங்கேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்றும் கட்டமைப்பு சார் இனவழிப்பு செவ்வனே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழனம் எழுபது ஆண்டுகளாக போராடுகின்றது. சனநாயக ரீதியில், ஆயுத ரீதியில் என்பதையெல்லாம் கடந்தே வந்திருக்கின்றது.

2009ஆம் ஆண்டு மே 18 மௌனிப்புக்கு பின்னர் எம் தமிழினத்தின் விடுதலையை தன் தோளில் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எடுத்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்களே என்று சிங்கள பெருந்தேசியவாதிகளின் முன்னிலையில் மார்பு தட்டினீர்கள். வெளிநாடுகள் உட்பட எங்கு சென்றாலும் உங்கள் மீது தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற முத்திரையையே பதித்தீர்கள். அதுமட்டுமா, 2009 இலிருந்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 பாராளுமன்ற தேர்தல் வரையில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களிடத்தில் இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களையும், உறவுகளைத் தொலைத்தவர்களையும், சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் பிரதானப்படுத்தி ஆணை கேட்டீர்கள். பாதிக்கப்பட்ட நாமும் பெரும் நம்பிக்கையில் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்கினோம்.

எமது நியாயமான கோரிக்கைளையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து அபிலாசைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏகப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கிய கூட்டமைப்பினரான நீங்கள் அல்லவா இதற்கான அனைத்துப் பொறுப்பினை ஏற்க வேண்டும். தற்போது உறவுகள் மறக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு மன கிலேச்சத்துடன் அன்றாட பொழுதை நகர்த்த வேண்டிய மிக மோசமான நிலைக்குள் அல்லவா நாம் இருக்கின்றோம். ஆனால் தெற்காசியாவின் சாணக்கியன் என்று பெயர் பூத்திருக்கும் சிரேஸ்ட தலைவர் சம்பந்தன் ஐயா எமது நலன்களை மறந்து அரசாங்கத்துடன் தேனிலவு அல்லவா கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்.

இத்தனை காலம் சென்றும் தென்னிலங்கையை நம்பிக்கொண்டிருக்கும் உங்களின் பெரும் தன்மையை என்னவென்று சொல்வது. அன்று, முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய நிலப்பரப்பில் வன்னி மாவட்ட மக்களாகிய நாம் முடக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்கறிந்திருந்த ஐயா சம்பந்தரும் அவருடைய பரிவாரங்களும் எம்மை விடுவிக்கும்படி ஒரு உரத்த குரலை உங்களால் முன்வைக்க முடியாமல் போனதேனோ?

முள்ளிவாய்க்காலில் விதையாகிப்போன தேசிய இன விடுதலையை நேசித்த ஒவ்வொரு ஜீவனினதும் ஏக்கங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட ஒவ்வொரு பிரதிநிதியினதும் மனச்சாட்சியை தட்டவில்லையா?

யுத்தம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் முடிவிற்கு வந்ததன் பின்னர் நாம் அனைவரும் வவுனியா மெனிக்பாம் திறந்தவெளி சிறைச்சாலைக்கு வந்தபொழுது அரசாங்கம் எங்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.

எங்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருந்து சனாதிபதித் தேர்தலையும், 2010ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலையும் அரசாங்கம் நடத்தியிருந்தது. அப்பொழுதும் நாங்கள் எங்களின் உயிர்களைத் துச்சம் என நினைத்து நீங்கள் கைகாட்டிய சனாதிபதி வேட்பாளருக்கும், நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் வாக்களித்தோம். சம்பந்தன் ஐயா அவர்களே, பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், மீள்குடியேற்றம் ஆரம்பித்திருந்த வேளையில், அப்பொழுதுதான் மீள்குடியேறியிருந்த எங்களை நீங்களும் உங்களது நாடாளுமன்ற குழுவினரும் எங்களை வந்து எமது இடங்களில் சந்தித்தீர்கள்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் எப்படி ஒரு வெட்டவெளி காணியிலும் புல்மண்டியிருந்த பற்றைகளிலும் இரவோடு இரவாக இறக்கிவிடப்பட்டிருந்தோம் என்பதை நீங்கள் நேரில் கண்டறிந்தீர்கள்.இடிந்த பாடசாலை கட்டிடங்களையும், மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஏணைகளையும் கண்டு உங்கள் குழுவினர் கலங்கி நின்றதையும் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொன்னதை நீங்களும் குறிப்பெடுத்துக் கொண்டீர்களே நினைவிருக்கா உங்களுக்கு?ஆண் துணையின்றி கொடுத்த தகரங்களையும், இரும்புக் கம்பிகளையும் கொண்டு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை மரக்கிளைகளில் கட்டிய ஏணையில் கிடத்தி பெண்கள் ஒன்று திரண்டு கொட்டில்கள் அமைத்ததைக் கண்ணுற்றபோதும் உங்களது இதயங்கள் வலிக்கவில்லையா?

எவ்வளவு பேர் தங்களது இன்னுறவுகளைக் காணவில்லை என்று உங்களிடம் ஓலமிட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இவ்வளவுபேர் இறந்துள்ளனர் என்றும் இவ்வளவு பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என்றும் எத்தனைபேர் உங்களிடம் புள்ளி விபரம் வழங்கினர். நீங்கள் எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவீர்களா? எத்தனை பாடசாலை அதிபர்கள் உங்களிடம் இந்தப் பாடசாலையில் குறைந்த பட்சம் இத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்று முறையிட்டிருப்பர்? அவற்றை நீங்கள் கணக்கெடுத்ததுண்டா?

மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் வேதனைகளையும் செவிமடுத்து மீண்டும் வந்து ஆவணப்படுத்துவதற்கான தரவுகளைப் பெற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தீர்களே இன்றுவரை அதனைச் செய்யாததன் காரணமென்ன? இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரும், தொல்பொருள் திணைக்களத்தினரும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும், வனப்பாதுகாப்பு திணைக்களமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் கையகப்படுத்திய காணிகளின் மொத்த அளவும் மக்கள் போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவும் எஞ்சிய காணிகளின் அளவும் உங்களிடம் இருக்கிறதா?

வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்பை நிரந்தரமாகப் பிரித்து, எமது வாழிடங்களிலேயே எம்மை இரண்டாந்தரக் குடிகளாக மாற்றும் நோக்கில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரசின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தீர்களா? உங்களால் புதிதாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு எம்மினம் பட்ட துன்பங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்களா? எமது விடுதலைப் போராட்டம் பற்றியும் நாம் கடந்துவந்த பாதை பற்றியும் கொஞ்சமாவது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்களா?எமது உறவுகள் தெரிவித்த கருத்துக்களை வைத்து அறிக்கை தயாரித்து இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்திருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுவீர்களா?

கிடைத்தற்கரிய துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டு எம்மினத்தின் விடுதலையை வென்றெடுப்பீர்கள் என்பதற்காகத்தானே நீங்கள் மூடிமறைத்த விடயங்களையும் திரைமறைவில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டோம்.உங்களது அணுகுமுறை தற்போது சர்வதேச உதவிகளையும் கேள்விக்குட்படுத்திவிட்டதே. அரசாங்கத்துடன் ஒத்தூதி சகல தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றிவிட்டீர்கள். அடுத்தநொடியே உங்களுக்கே பிரதிபலன் கிடைத்தாகிவிட்டது. இப்படியிருக்க எம் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது ஆண்டு வருகிறது.

உறவுகளை நினைவு கூருவதை யாரும் தடுக்கமுடியாது என்று அறிக்கை விடுவீர்களா? இல்லை அடுத்து தேர்தல்கள் என்பதால் நீங்களே முள்ளிவாய்க்கால் திடலுக்கு நேரில் வருவீர்களா என்று தெரியவில்லை. அது உங்களின் இராசதந்திரம்.

இப்போது வரையில் நாங்கள் நம்பிக்கெட்டவர்களே! உங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. தீவிரவாதத்தின் பேரால் எமது உரிமைப்போராட்டமே முற்றாக முடங்கும் அபாய நிலையில் இருக்கின்றோம். ஆகவே உங்கள் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் புனிதம் நிறைந்த முள்ளிவாய்க்கால் திடலில் காலடி பதிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அரசியலுக்காக நீலிக்கண்ணீர் வடியுங்கள். ஆனால் ஆஃகுதியானவர்களின் நெஞ்சில் ஏறி நின்று உங்கள் நாடகத்தினை அரங்கேற்றாதீர்கள் என்பதே எமது தயவான கோரிக்கை. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ‘நினைவேந்தல் நிகழ்வு’ என்ற கோட்பாட்டில் நடைபெறுவதற்கு வழிசமைத்து ஒதுங்கிவிடுவதே சாலச்சிறந்தது….

Updated: May 29, 2019 — 5:47 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *