தன்னினம் வாழத் தன்னுயிர் ஈந்த பொன். சிவகுமாரன்!

தொடக்கு போரை தொடக்கு போரை
என்று சொன்னவனை
சிவக்குமாரை சிவக்குமாரை
நெஞ்சம் மறந்திடுமோ…….”


எமது புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிவரிகள் இவை. இன்றைய நாளின் நினைவுகளுக்குரிய தன்மான வீரன்பொன். சிவகுமாரன் ஈழத்தமிழினத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத மானமாவீரன்.

இலங்கைத்தீவில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியபின்னர், தமிழ்மக்களை சிங்களப்பேரினவாதிகள் மிக மோசமாக ஒடுக்கவும் அடக்கவும் தலைப்பட்டனர். இதனை அமைதியானமுறையில் எதிர்த்து, தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அன்றைய தமிழ் தலைவர்கள் போராடினார்கள்.

தமிழ்மக்களுடைய அன்றைய அமைதிவழிக் கோரிக்கைகளும் போராட்டங்களும் சிங்களப்பேரினவாதத்தால் வன்முறைகொண்டு நசுக்கப்பட்டன. தமது அடிப்படை உரிமைகளுக்காக குரல்எழுப்பிய தமிழர்களின் குருதி இலங்கைத்தீவின் தெருக்களிலும், பாராளுமன்ற முன்றலிலும் கொட்டிக் காய்ந்தது. தமிழ்மக்களின் மீது அவ்வப்போது இனஅழிப்புத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு ஆதரவளிக்க மறுத்த தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது தமிழர்கள்மீது பேரினவாத வன்முறை ஏவிவிடப்பட்டது. இதில் 9 தமிழர்கள் துடிதுடித்து மாண்டனர் என்பது வரலாறு.

இருந்தும் தமிழ்மக்கள் ஓய்ந்திருக்கவில்லை. தம்மால் இயன்ற வழிகளில் உரிமைப்போரை முன்னெடுத்தே வந்தார்கள். இது சிங்களப்பேரினவாதத்திற்கு பெருங்கடுப்பேற்றிற்று. தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் அனைத்து கோரிக்கைகளையும் சிங்களப்பேரினவாதம் ஆயுதமுனையில் வன்முறையை ஏவி அடக்கிவந்தது. இதனைக் கண்டு கொதித்து, நாடிநரம்புகள் புடைக்க நின்றவர்களில் முதன்மையானவனாக இருந்தவன் தியாகி பொன்.சிவகுமாரன்.

தமிழர்தாயகத்தின் உரும்பிராய் மண்ணிலே பொன்னுத்துரை அன்னலட்சுமி என்கின்ற பெற்றோருக்கு மகனாக உதித்தவன், பின்னாளில் செயற்கரிய செய்து, உலகத்தமிழர்களின் பிள்ளையானான். அமைதிவழியில் உரிமைக்குரல்கொடுத்து வந்த தமிழ்மக்களை அடித்தும், உதைத்தும், சுட்டும், எரித்தும் வதைத்தும் வந்த சிங்களப்பேரினவாதத்திற்கு தமிழர்கள் கோழைகளல்ல என உணர்த்த துடித்தவன் அவன். நாடாளுமன்ற அரசியல் என்பது ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உதவாது என்பதுதான் சிவகுமாரனின் தீர்க்கமான முடிவாக அன்றிருந்தது. பேரினவாதிகளின் மொழியில் பேசினால்தான் அவர்களுக்கு புரியும் என்பது அவனது நிலைப்பாடாக அன்று இருந்தது.

அதனால், தன்னந்தனியனாக நெஞ்சுநிமிர்த்தி நின்று சிங்களப்பேரினவாதத்தின் காவற்றுறையினர்மீதும் அவர்தம் அடிவருடிகள் மீதும் தாக்குதல்களை நடத்தினான். அன்றைய காலகட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளராகவும் அடிவருடியாகவும், தமிழினத்தின் விரோதியாகவும் இருந்த யாழ்ப்பாண நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதான அவனது தாக்குதல் முதன்மையானது. இத்தாக்குதலில் யாழ்நகர மேயர் உயிர்பிழைத்துக்கொண்டாலும், காலம் அவருக்குரிய தண்டனையை தேசியத்தலைவர்மூலமாக வழங்கிற்று என்பது வரலாறு.

இதன்காரணமாக சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டு கொடுஞ்சிறையில் வதைந்தான். ஒருமுறை சிறையில் புத்தர்சிலைக்கு முன்னால் அமர்ந்திருந்து உணவொறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டான் சிவகுமாரன். தனது போராட்டத்தை நிறுத்த மறுத்த சிவகுமாரனை சிறைக்குள் தாக்கிய சிறைக்காவலர்கள், அவனது தலையிலிருந்து பெருகிய குருதியை புத்தர்சிலைக்கு காணிக்கையாக்கியதாகவும் அறிகிறோம்.

சிறையின் கொடூரங்களை அனுபவித்தபோதும், சிறையிலிருந்து மீண்ட சிவகுமாரன் அஞ்சி ஒளிந்திடாமல் மீண்டும், தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ்மக்களுக்கு அச்சுறுத்தலாகவிருந்த காவல்துறையினரை அழித்தொழிக்கவும் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அன்றைய காலச்சூழலில் அவன் தனித்தே இயங்கவேண்டியவனாக இருந்தான்.

இந்தநிலையில் மீண்டும் நல்லூரில் சிங்களபேரினவாத காவல்துறையினர்மீது அவன் தாக்குதல் தொடுத்தான். இதனால், சிங்கள அரசின் காவற்றுறை சிவகுமாரனை இலக்குவைத்தது. இனி தான் உயிரோடு பிடிபட்டால், தப்பிக்க முடியாது எனப் புரிந்துகொண்ட சிவகுமாரன் தலைமறைவாகினான். ஆனால், தமிழர்களின் வரலாற்றில் எதிரிகளைவிடவும் துரோகிகளே ஆபத்தானவர்களாக இருந்துவந்துள்ளனர். சிவகுமாரனையும் ஒரு கோடரிக்காம்பு விரல்நீட்டிக் காட்டிக்கொடுத்தது.

சிவகுமாரன் சுற்றிவளைக்கப்பட்டான். அக்கணத்தில் எதிரியிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்பதுதான் அவனுக்கு தோன்றியது. தன்னோடு எப்போதும் கொண்டுதிரிந்த வேதியியல் நச்சுவில்லையை அருந்தினான் அவன். நஞ்சு அருந்திய நிலையில் கைதுசெய்யப்பட்ட அவனை எப்படியாவது காப்பாற்றி சிறையில் போட்டு அணுஅணுவாக சிதைக்கவேண்டும் என ஆவலுற்றனர் சிங்களகாவற்றுறையினர். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தையும் தாண்டி தன்மான வீரனாக, தமிழர்தாயகத்தின் முதல்மானத் தமிழனாக அவன் விழிமூடிக்கொண்டான்.
அவன் அவாவிநின்ற தமிழர் உரிமைகளையும் தமிழர் தேசத்தையும் தாங்கி, தாயகத்தை மீட்டெடுக்கவே, தமிழீழ விடுதலைப்போராட்டம் தேசத்தலைவனது தலைமையில் பேரெழுச்சியுற்றது.

சிவகுமாரனின் வாழ்க்கை வரலாறு என்பது ஈழத்தமிழ் இளையோர்கள் இன்று படித்துணரவேண்டிய கட்டாய பாடம். சிவகுமாரனை கருவாகச் சுமந்திருந்த காலத்தில் அவனது தாயார் அன்னலட்சுமி தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்களிலும், ஊர்வலங்களிலும் பேரார்வத்தோடு பங்கேற்றவர். தமிழினப்பற்று மிக்க அந்தத் தாயாரின் தாய்நாட்டுப் பற்றும் துணிச்சலும் தான் அவனை இறுதிக்கணம்வரை மண்டியிடாத மாமனிதனாக வாழவைத்தது.

அதேவேளை தன்னுடைய இனத்திற்கு அநீதிகள் இழைக்கப்பட்டபோது, அஞ்சிநடுங்காது அந்த அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பி போராடவேண்டும் என்கின்ற பேரெண்ணம் கொண்டவனாக சிவகுமாரன் வாழ்ந்தான். அவன் நினைத்திருந்தால் வசதியான வாழ்க்கைக்குள் தன் கனவுகளைக் கரைத்திருக்க முடியும். ஆனால் பிறந்த பொன்நாட்டிற்காக அவன் தன்னை அர்ப்பணித்தான்.

எனவேதான் சிவகுமாரனின் நினைவாக தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையால் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் முன்மொழியப்பட்டு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

எமது தேசவிடுதலைப்போராட்டத்தின் ஓர் அங்கமான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில், தியாகி சிவகுமாரனை நாம் ஆழமாக நெஞ்சிற் பதித்துக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. எமது தாயக விடுதலைப்போராட்டத்தை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொண்டு, இன்னமும் தமிழினத்தை அழித்தொழிக்கவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாதம். எமது இளைய தலைமுறையினரிடம் பேரெழுச்சி கொள்ளக்கூடிய தமிழினப்பற்றை சகலவழிகளிலும் சீரழித்துவருகிறது. குறிப்பாக
எமது இளையோரிடத்தே தீயபழக்கவழக்கங்களைப் புகுத்தி அவர்கள் மூலமாக பண்பாட்டுச் சீரழிவுகளை ஏற்படுத்துகிறது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழ் இளையோர்களைப் பற்றிய தவறான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்இனத்தின் மானத்தை இழக்கச்செய்ய வைக்கும் ஒரு சூழ்ச்சித்திட்டமாகவே இதனை நாம் உணரவேண்டும்.

இந்த சூழ்நிலையில் தான் தியாகி. பொன். சிவகுமாரனதும் தாய்நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அனைவரதும் வரலாறு எம் இளையோருக்கு எடுத்துக்காட்டாக முன்மொழியப்படவேண்டும். தமிழன் எனச்சொல்லி தலைநிமிர்ந்து வாழ்வோம்.

Updated: June 5, 2019 — 8:57 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *