கண்கள் புத்தருக்கு காணிக்கையாக படைக்கப்பட்ட இன்றையநாள் – 25.07.1983 !! ( காணொளி இணைப்பு )

ஈழத்தைப் பார்க்க விரும்பிய கண்கள் புத்தருக்கு காணிக்கையாக படைக்கப்பட்ட இன்றையநாள் !!


குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்ட இன்றையநாள்..

இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் ( 1843-இல் ) கட்டப்பட்டதாகும்.

இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள்.
தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில்
விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப்
போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டவெலிக்கடைச் சிறைச்சாலையின் சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும்.கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை,
வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால்
ஏவிவிடப்பட்டனர். கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில்குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர்.

சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். இவ்வறைகள் தூக்குத்தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர்.

பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் ( சக அதிகாரிகள் உள்பட ) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும்.

இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி
இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது. 25-7-1983- இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிதுநேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித- காவலதிகாரி.
ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள். திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர்

உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு. தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.
வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றனசிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள். ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத்
தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள்.
வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு,
சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து “”ஜெயவேவா” ( மகிழ்ச்சி ஆரவாரம் ) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.


குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர்.

அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனையகைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.
பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால்
வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர். சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “”சில்” அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு ( பவுசர் ) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான். இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான்.

இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும். சிறைச்சாலை வாகனத்தில் தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள் !

குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள் ? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.

(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, ‘Tamil Tribune’ எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய “Eyes Of Kuttimani” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு …

* தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
* குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
* ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
* தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
* சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
* செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
* அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
* அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
* ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
* சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
* சின்னதுரை அருந்தவராசா
* தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
* மயில்வாகனம் சின்னையா
* சித்திரவேல் சிவானந்தராஜா
* கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
* தம்பு கந்தையா
* சின்னப்பு உதயசீலன்
* கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
* கிருஷ்ணபிள்ளை நாகராஜா
* கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
* அம்பலம் சுதாகரன்
* இராமலிங்கம் பாலச்சந்திரன்
* பசுபதி மகேந்திரன்
* கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
* குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
* மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
* ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
* ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
* கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
* யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
* அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
* அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
* அழகராசா ராஜன்
* வேலுப்பிள்ளை சந்திரகுமார்
* சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகிய 35 தமிழர்களும் ….

இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு…

* தெய்வநாயகம் பாஸ்கரன்
* பொன்னம்பலம் தேவகுமார்
* பொன்னையா துரைராசா
* குத்துக்குமார் ஸ்ரீகுமார்
* அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
* செல்லச்சாமி குமார்
* கந்தசாமி சர்வேஸ்வரன்
* அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
* சிவபாலம் நீதிராஜா
* ஞானமுத்து நவரத்தின சிங்கம்
* கந்தையா ராஜேந்திரம்
* டாக்டர் ராஜசுந்தரம்
* சோமசுந்தரம் மனோரஞ்சன்
* ஆறுமுகம் சேயோன்
* தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
* சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
* செல்லப்பா இராஜரட்னம்
* குமாரசாமி கணேசலிங்கன்

Updated: July 25, 2019 — 12:58 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *