வந்தாறுமூலை படுகொலைகளின் 29ம் ஆண்டு நினைவு தினம் – 05.09.2019 !!

வந்தாறுமூலை படுகொலைகளின் 29ம் ஆண்டு நினைவு தினம் – 05.09.2019 !!
 
தமிழின உயர்கொலைநாள் இன்று- சிங்களஇராணுவத்துடன் முஸ்லிம் ஜிகாத், புளொட்அரச கைக்கூலிகள், நடத்திய வந்தாறுமூலை படுகொலைகள்.!
 
தமிழின உயிர்கொலைநாள் இன்றாகும். 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கோரப்படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் நாளை தமிழின உயர்கொலைநாள் என பிரகடனப்படுத்தி வருடாந்தம் அதனை நினைவு கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கருதப்படும் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
 
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
கப்டன் முனாஸ் என்ற இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்ற போதிலும் இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
 
இந்நிலையில் இன்று இவர்களின் நினைவாக கிழக்கு பல்கலைக்கழக இந்து ஆலயம், மற்றும் வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலயம் உட்பட மட்டக்களப்பில் உள்ள ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் விசேட பூசைகள் நடத்தப்பட்டன.
 
1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
 
இந்த அகதிமுகாமில் இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமுக்கு பொறுப்பாக இருந்த கலாநிதி ஜெயசிங்கம் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதில் தஞ்சமடைந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வந்தாறுமூலை, சுங்காங்கேணி, கறுவாக்கேணி, செங்கலடி பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
 
கிழக்கு பல்கலைக்கழக படுகொலை தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கி.பாலகிட்னர் தலைமையிலான ஆணைக்குழு விசாரணையின் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
சம்பவ தினம் செப்டம்பர் 5ஆம் திகதி காலை 8மணியளவில் அம்முகாமை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் அனைவரையும் பொதுமைதானத்திற்கு வருமாறு அழைத்தனர்.
 
அங்கே கொம்மாதுறை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ், கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேரும் நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்களும் வந்திருந்தனர்.
 
வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டவர்களில் இளைஞர்கள் 158பேர் தெரிவு செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
 
இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
 
இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என தெரிவித்திருந்தது.
Updated: September 5, 2019 — 1:47 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *