தியாக தீபமே……

தியாக தீபமே……
 
தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில்
தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே
 
அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில்
அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும்
 
ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும்
ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான்
 
ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன்
கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான்
 
தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால்
மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது
 
இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன்
இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே
 
சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய்
கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன்
 
தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே
தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே
 
அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால்
ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்
 
அஹிம்சையே கொள்கையாம் சொன்னவர் செய்கையால்
அருமருந் தானஎம் திலீபனும் தூங்கினான்
 
அடிதடி மட்டுமே அறிந்தவர் இவரென
அயலுள நாடுகள் எள்ளிய வேளையில்
 
அறவழிப் போரிலும் அசையா இனமென
அகிலமே கண்டிட அமரனாய் ஆகினான்
 
வாய்களில் வார்த்தைகள் வந்திட மறுத்தது
விழிகளும் நீரினைச் சொரிந்துமே களைத்தது
 
தமிழரெம் தலைகளும் ஒருநொடி சரிந்தது
தவப்பெரும் புதல்வனின் மறைவினால் பதைத்தது
 
இருக்கையில் பிறர்பணி செய்திட மறுப்பவர்
இருக்குமிப் புூமியில் இருந்துமே வந்தவன்
இறந்துமே உடல்தனை அடுத்தவர்க் கீந்தவன்
 
இருக்கிறான் தமிழரெம் இதயச் சிறையிலே..
Updated: September 6, 2019 — 9:19 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *