பெளத்த பயங்கரவாதம் – மே 18 2009 அன்று பிரான்ஸ் Canal + இல் Guignols என்ற நிகழ்வில் ஒளிபரப்பான காட்சி !!

பெளத்த பயங்கரவாதம் – மே 18 2009 அன்று பிரான்ஸ் Canal + இல் Guignols என்ற நிகழ்வில் ஒளிபரப்பான காட்சி !!

மே 18 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழினம் பேரழிவின் உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில், இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீட்கப்பட்டு, உள்நாட்டுப் போர் முடிவடைந்து விட்டதாக உலகின் சில ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் பொய்களை முழங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அன்றைய தினம் ( 18.05.2009 ) பிரான்சின் ஒரு தொலைக்காட்சி வெறும் 40 விநாடிக் காட்சிகளில் சிறீலங்காவின் கொடூர முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருந்தது.

சிறீலங்காவின் பெளத்த பேரினவாதத் சித்தாந்தத்தை அந்தக் காட்சி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டு வதாக அமைந்திருந்தது. பிரான்சின் சனல் புளுஸ் ( Canal + ) என்ற தொலைக்காட்சியில் உருவப் பொம்மைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் guignols என்ற நிகழ்வு மிகவும் பிரபல்யமானது. அந்தத் தொலைக்காட்சிக்கு பெரும் புகழைத் தேடித்தந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, பல இலட்சக்கணக்கான நேயர்களையும் பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி அது. அதனால்தானோ என்னவோ, கட்டணத் தொலைக்காட்சி சேவையான சனல் புளுஸ், இந்த guignols நிகழ்வை எப்போதும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கிவருகின்றது.

குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும்போது அனைவரும் அதனைப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி அலைவரிசையை இலவசமாகத் திறந்துவிடுகின்றது. மே 18 ஒளிபரப்பான அந்தக் காட்சியில், சுமார் 40 விநாடிகள் இலங்கை குறித்து அதில் பேசப்படுகின்றது. ‘‘சிறீலங்காவின் எறிகணையால் விடுதலைப் புலிகள் நசுக்கப்பட்டார்கள். ஆனால், அமெரிக்காவின் கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போன்று சிறீலங்கா குறித்தும் பிரான்சில் யாருக்கும் அக்கறையில்லை’’ என்று செய்தி வாசிப்பாளரின் அறிமுகத்துடன் தொடங்கும் நிகழ்வில், ‘‘விடுதலைக்காகப் போராடும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெளத்த படையினரை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என செய்தி வாசிப்பாளர் கூறும்போது, இரண்டு சிங்களப் பெளத்த பிக்குகள் நடந்து வருகின்றார்கள். அவர்கள் நடந்து வரும் பாதையில் சில எறும்புகள். அதனை ஒரு பிக்கு சுட்டிக்காட்டி ‘இதனை நாம் மிதித்துவிடக் கூடாது. இது உன்னோட அப்பவாகக் கூட இருக்கலாம்’ என்று கூறுகின்றார். அதற்கு மற்றைய பிக்கு ‘எங்களை மன்னித்துக்கொள் எறும்பு’ என்று கூறிவிட்டு இருவரும் எறும்புகளை மிதித்து விடாமல் கடந்து செல்கின்றனர். பின்னர் சிலந்தி அவர்களின் பாதையில் வருகின்றது. ‘சிலந்தி…’ என பெளத்த பிக்கு எச்சரிக்கின்றார். அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக்கூறி அதனையும் மிதித்துக் கொன்றுவிடாமல் இருவரும் அதனிடம் மன்னிப்புக் கேட்டபடி கடந்து செல்கின்றனர்.

அப்போது திடீரென ஒரு பிக்கு ‘அதோ தமிழர்கள்..!’ என எச்சரிக்கின்றார். உடனே இரண்டு பிக்குகளும் தங்கள் துப்பாக்கிகளை எடுத்து தமிழர்களை நோக்கிச் சுட்டுத்தள்ளுகின்றனர். பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்க அங்கே கறையான்கள் தென்பட அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக் கருதி அவற்றையும் மிதித்துவிடாமல் கடந்து செல்வதுடன் அந்தக் காட்சி முடிகின்றது.

Updated: October 4, 2019 — 8:31 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *