கேப்பாப்பிலவு முகாமை நிரந்தரமாக்கத் திட்டம்: விக்கி..

கேப்பாப்பிலவு முகாமை நிரந்தரமாக்கத் திட்டம்: விக்கி..

“மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ள சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்காகவே கேப்பாப்பிலவு இராணுவ முகாமை நிரந்தரமாக வைத்திருப்பதற்கு இராணுவம் முற்படுகின்றது” எனக் குற்றஞ்சாட்டியுள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், இந்த முகாமை விடுவிப்பதற்கு இனிமேலும் கால அவகாசம் கொடுக்க முடியாது எனவும் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவரும் மக்களை நேற்று சனிக்கிழமை நேரில் வந்தித்து அவர்களுடைய போராட்டத்திலும் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர், அவர்கள் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

கேப்பாப்புலவில் நிலைகொண்டுள்ள இராணுவம் அங்கிருந்து வெளியேறி தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி பல மாதகாலமாக இந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். இராணுவம் வெளியேறுவதற்குத் தொடர்ச்சியாக் காலக்கெடுவைக் கேட்டுவரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் நேற்று அங்கு சென்றிருந்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது;

“மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறு முன்னெடுக்கப்படும் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே கேப்பாப்புலவில் நிரந்தரமான இராணுவ முகாம் ஒன்றை வைத்திருப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

இதனை அவர்கள் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகக் கருதுகின்றார்கள். சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையிலேயே அவர்கள் பொதுமக்களுடைய இந்தக் காணிகளை ஆக்கிரமித்திருக்கின்றார்கள். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது உங்களுடைய சொந்த நிலம். இதனை போர்க்காலத்தின் போது இராணுவம் கைப்பற்றியது. இதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கான உரித்து உங்களுக்கு இருக்கின்றது. இதனை இராணுவம் தொடர்ந்தும் வைத்திருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதற்காக நீங்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது. நீங்கள் இதற்காகத் தொடர்ந்தும் போராட வேண்டும். உங்களுடைய இந்தப் போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு நிச்சயமாக உள்ளது.

கேப்பாப்பிலவுப் போராட்டம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இராணுவ முகாமை விடுவிப்பதற்கு கால அவகாசம் ஆறு மாதம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார். நான் கால அவகாசம் வழங்க முடியாது எனக் கூறினேன். மக்கள் பல மாத காலமாக மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய ஒரு பகுதிக்காணியயாவது விடுவித்த பின்னர் நீங்கள் கால அவகாசம் கோரியிருக்கலாம். தொடர்ச்சியாக கால அவகாசத்தை வழங்கிக்கொண்டிருக்க எம்மால் முடியாது.

சுமந்திரன் போன்றவர்கள் கால அவகாசத்துக்குச் சம்பதித்துக்கொண்டு செல்கின்றார்கள். ஜெனீவாவில் எப்படிக் கால அவகாசம் கேட்கப்படுகின்றதோ அவ்வாறுதான் இங்கும் எமது காணிகளை விடுவிக்க கால அவகாசம் கேட்கப்படுகின்றது. இது போரின் போது கைப்பற்றப்பட்ட காணி. இது எமது மக்களின் காணி. இதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதற்கான பூரண ஆதரவு நாங்கள் தருவோம்.”

Updated: February 10, 2019 — 7:58 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *