நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் பௌத்தர்களுடையதென முல்லையில் ஆர்ப்பாட்டம்..!!

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் சிங்கள பௌத்தர்களுடையதெனக் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம், பௌத்த மதகுருமாராலும், வெளியிடங்களிலிருந்து வருகைதந்த சிங்கள மக்களாலும் 05.06.19 (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தார். 

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை எனவும் இதை தமக்குத் தர வேண்டும் எனவும் அரசியல்வாதிகளின் பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக தங்களுடைய விகாரையில் குழப்பம் நிகழ்கிறது என்றும் தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதில் தலையிட்டு விகாரையை தம்மிடம் பெற்றுத்தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துமீறி விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்ததோடு இரு தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிடப்பட்டது.

இந்நிலையில் வெளியிடங்களில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருப்பது அங்கு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.

Updated: June 6, 2019 — 6:22 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *