தேசிய தலைவரின் திட்டமும் தமிழீழ வெற்றியும்….

தமிழீழ மண் குருதி படிந்து சிவந்துபோயிருக்கிறது. காற்று வீசும் திசையெல்லாம் பிணவாடை. கருகிய வாடையினூடே அந்த வேட்டுக்களின் வாசமும் இணைந்து நாசியை நாசப்படுத்துகிறது. காற்று வீசும் போதெல்லாம் சுமந்து வரும் நினைவுகளில் இதயம் கணத்துப் போகிறது. என்ன செய்வது?எப்படி செய்வது?
என்றெல்லாம் நமக்குள் விரக்தியோ, அவநம்பிக்கையோ இன்னமும் ஏற்படவில்லை. இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கான ஒரு உலகு இருக்கிறது என்கிற ஞானி காரல் மார்க்சின் வார்த்தைகள் நம்முடைய மனங்களை இன்னும் இன்னுமாய் உறுதிபடுத்துகிறது. நமக்குள் இன்னமும் தொய்வே ஏற்படவில்லை.

லட்சக்கணக்கில் உயிர் பலி கொடுத்தோம், கோடிக் கோடியாய் சொத்துக்களை இழந்தோம், வடித்த கண்ணீரை மொத்தமாக்கினால் மீண்டும் ஒரு உப்புக் கடல் உருவாகிவிடலாம். அப்படியிருந்தும்கூட, இன்னமும் அந்த நம்பிக்கை நட்சத்திரத்தை உற்றுப்பார்க்கிறோமே அச்செயல் தான் நமது வெற்றிக்கு அடையாளமாய் திகழ்கிறது. நடந்து முடிந்த கடுஞ்சமரில் கொத்துக்குண்டுகளில் இருந்த வேதியியல் பொருட்கள் நம்முடைய தோலை பொசுக்கி நாசமாக்கியது. நம் உடலின் உறுப்புக்களை சிதைத்துப்பார்த்து சிரித்தது. விழிகளை இழந்தோம், கால்களை இழந்தோம், நம் கண்முன்னே நம் உறவுகளின் உயிர்களையும் இழந்தோம். ஆனால் நம்முடைய நம்பிக்கை இன்னமும் இழக்கவில்லை.

நமக்கான ஒரு நாடு இதோ நம் பக்கத்தில் இருக்கிறது. இழப்புகளிலிருந்து கிடைக்கும் வெற்றிதான் நிரந்தரமளிக்கும். நாமும் முடிந்தமட்டும் இழந்தோம். இன்னும் இன்னமுமாய் இழப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனை இழப்புகளை சந்தித்தாலும் நாம் நிச்சயமாய் நமக்கான நாட்டை அடையாமல் இருக்க மாட்டோம். தமிழீழம் முழுக்க நடைபெற்ற கடுஞ்சமரில் இழப்புகளுக்கு மத்தியில் தாய் தமிழகத்தை நம்பிக்கையோடு ஏறிட்டுப் பார்த்தோம். என்னச்செய்வது அவர்களும் இந்திய தேசியத்தின் அடிமைகள் தானே. வெறும் நடிப்பாக உண்ணாநிலை அறபோராட்டம், உணர்வற்ற மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், குரல் முழக்கம் என்றெல்லாம் இந்திய தேசியத்தை பகைத்துக் கொள்ளாமல் ஆடிப்பார்த்தார்கள். நடக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை.தமிழ்நாட்டில் ஒவ்வொரு போராட்டமும் வடிவெடுக்கபடும்போதெல்லாம் தமிழ் ஈழத்தில் பிணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

நம் உறவுகளின் சிதைந்த பிணங்களை படங்களாக இணையத்தளங்களின்மூலம் உலகம் முழுக்கக் கொண்டு சென்றோம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தம்முடைய கையாளாகாத தனத்தால் கண்ணீர் விட்டார்களே ஒழிய, வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. யாரை நம்பினோமோ அங்கிருந்தும் நமக்கு எவ்வித உதவியும் இல்லை. எதிரியோடு சேர்ந்து இந்திய அரசும் தமிழீழ மக்களை சிதைத்தது. ஆனால் இந்தியாவில் வாழும் தமிழக மக்கள் நமக்கென்ன என்று அமைதியாக இருந்தார்கள். இந்தப்போரின் இறுதி கட்டம் நெருங்கும்போது புலிகளின் குரல் ஒலித்தது. எங்கள் கருவிகளை நாங்கள் மௌனமாக்குகிறோம். எங்களுடைய துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பேசாது என. எல்லோரும் நினைத்தார்கள் இது ஏதோ தோற்றுப்போகிறவனின் குரல் என்று. ஆனால் தமிழ் தேசிய தலைவரின் தொலைநோக்கு அங்கே சூரியனாய் பளிச்சிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிப்படைக்கு ஒருவேளை தலைவர் கட்டளையிட்டிருந்தால் சிங்கள படை மட்டுமல்ல, அதோடு கைகோர்த்த அத்தனை படைகளும் சிதைந்து போயிருக்கும். தலைவரின் அரசியல் அறிவு, அங்குதான் ஒளிவிட்டு எரிந்தது. உலக நாடுகள் முழுக்க அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பிற்கு பின் தாயக விடுதலை போராளிகளை பயங்கரவாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருந்தபோது உலக நாடுகளும் அதை ஏற்று, புலிகளை தடை செய்ததது. அப்போது மௌனம் காத்த இயக்கம் இப்போது மீண்டுமாய் மௌனிக்கச் சொன்னதற்கு காரணம், பாருங்கள், நாங்கள் எமது மக்களை காக்கவே கருவி ஏந்தினோம். இப்போது எமது மக்களை காக்கவே கருவி களைகிறோம் என்பதை அறிவிக்கவே.

இதன்மூலம் இத்தனைக்காலம் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கம் மெல்ல மக்கள் இயக்கம் என்பதை பதிவு செய்தது. இதன்பின் போர் முடிந்தது. தலைவர் கொல்லப்பட்டதாக, புலிகள் கொல்லப்பட்டதாக ஏராளமான பரப்புரைகளை இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுடன் இணைந்து சிங்கள பேரினவாத அரசு செய்து முடித்தது. ஆனால் போரை நடத்திக் கொண்டிருந்த ராஜபக்சேவின் கூட்டாளி சரத்பொன்சேக மனவோட்டத்தை புலிகள் இயக்கம் நன்கு அறிந்திருந்தது. ஆதிக்க வெறி பிடித்த சரத்பொன்சேக நிச்சயமாய் ராஜபக்சேவுக்கு எதிராக களம் அமைப்பார் என்கிற ஒருபார்வை தலைவருக்கு இருந்த காரணத்தினால் புலிகளை அமைதி காக்கச் செய்தார்.புலிகளின் திட்டம் வெற்றிப் பெற்றது.

அவர்கள் நினைத்தது போலவே சரத்பொன்சேக இராணுவத் தலைவர் பதவியிலிருந்து நாட்டுத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். தேர்தலும் வந்தது. இந்த நேரத்தில் நாம் ராஜபக்சே குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சரத்பொன்சேக-வை அவரின் மனவோட்டத்தை எப்படி தலைவர் அறிந்திருந்தாரோ அதேபோலவே ராஜபக்சேவின் மனவோட்டத்தையும் அவரின் எதிர்கால திட்டங்களையும் தலைமை நன்கு அறிந்திருந்தது. ராஜபக்சே வாழும் இட்லர். இப்போது வாழும் பிள்ளைகளுக்கு இட்லரை தெரியாது. இட்லர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ ராஜபக்சேவை பாருங்கள்.

இட்லரும் ஆரம்ப காலத்தில் யூதர்களை ஒழிக்க வேண்டும்,யூத இனத்தை சாய்க்க வேண்டும் என்றுதான் ஜெர்மானியர்களை தயார் செய்தான். நாளடைவில் யூதர்களை மட்டுமல்ல யாரெல்லாம் தம்மை எதிர்க்கிறார்களோ அல்லது தம்முடைய சிந்தனைக்கு எதிர்கருத்து வைத்திருக்கிறார்களோ அவர்களையும் இணைத்துக் கொலைசெய்தான். ராஜபக்சேவும் அப்படித்தான் செய்கிறான். முதலில் தம்முடைய நிலை என்பது தமிழர்களுக்கு எதிரானதாக மட்டுமே இருந்தது. ஆனால் நாளடைவில் சிங்கள ஊடகவியளர்கள், கருத்தாளர்கள், சனநாயக பண்பு கொண்ட சிந்தனையாளர்கள், தமக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் ஆகியோரையும் சேர்த்து அழிக்கத் தொடங்கினான்.

அடையாளம் தெரியாத ராஜபக்சேவின் அடியாட்களால் சிங்கள சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஊடகவியலர்கள் கடத்தப்பட்டார்கள். நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள். அப்போது சரத்பொன்சேக ராஜபக்சேவின் கூட்டாளி. இப்போது சரத்பொன்சேக ராஜபக்சேவின் கைதி. எந்த கையைக் கொண்டு தமிழர்களை அழித்தானோ அதே கைகளைக் கொண்டு சிங்கள மக்களையும் ராஜபக்சே அழிக்கத் தொடங்கியிருக்கின்றான். ஆக இட்லரின் சிந்தனை, செயல், நடைமுறை அனைத்தும் ராஜபக்சேவின் மூளைச் செல்களில் உறைந்துபோயிருக்கிறது. இதை மாற்ற முடியாது. ஒருவேளை இட்லருக்கு வந்த நிலைமை தான் ராஜபக்சேவுக்கும் வரக்கூடும். வரலாறு இதைத்தான் சொல்கிறது. எக்காலத்திலும் எந்த வரலாற்றிலும் மக்கள் தோற்றதில்லை. மக்கள் தான் வெற்றியாளர்கள். ஆதிக்க மனம் படைத்த கொடுங்கோலர்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ஒருபோதும் தொடர்ந்து அரியணையில் இருந்ததில்லை.

லண்டன் மாநகரின் பாதிரிகளின் அநியாயங்களை கண்டித்து அற்புதமாக கவிதை வடித்த மா கவிஞன் ஷெல்லி, குளிர்காலம் வந்தால் என்ன? வசந்தம் வராமலா போகும்என்று உலகிற்கே நம்பிக்கை ஊட்டினான். இப்போது அழிவு வந்தால் என்ன? தமிழர் ஆட்சி வராமலா போகும் என்ற நம்பிக்கையை ராஜபக்சே தோற்றுவித்திருக்கிறார்.அதிபர் தேர்தல் வந்தது. மிகக் கேடு நிறைந்த நிலையில் அடக்குமுறையாக ஆட்சி அதிகாரத்தை தேர்தல் என்ற போர்வையிலே ராஜபக்சே பறித்துக் கொண்டார். இதன்மூலம் வெற்றி என உலக சமுதாயத்திற்கு தம்மை அடையாளப்படுத்தினார். அதன் தொடக்கமே பொன்சேக கைதிலே நிறைவுகண்டது. யாராக இருந்தாலும் உறவோ, உயிரோ ஆனாலும் தமது நிழலே தமக்கு தீங்கு செய்வதென்றால் அதை கொன்றொழிப்பதுதான் ராஜபக்சேவின் சிந்தனை. அதைத்தான் பொன்சேக கைது மூலம் ராஜபக்சே நிரூபித்திருக்கிறார்.

இந்த போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்களில் தான் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் தம்முடைய கரங்களிலிருந்து தமக்கான நாடு வேண்டும் என, புலிகளே தம்முடைய அரசியல் அங்கீகாரம் என, தேசிய தலைவரே தங்களின் அதிபரென உலகெங்கும் அறிவித்தார்கள். தாம் வாழும் இடங்களிலெல்லாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து வாக்கெடுப்பு நடத்தினார்கள். உலகின் எல்லா பகுதியிலும் தமக்கான தீர்வு தமிழீழ தாயகம் என்பதை உறுதிப்படுத்தி வாக்களித்தார்கள். உலக நாடுகளின் முன்னால் ராஜபக்சே அம்பலப்பட்டுப்போனான்.தாம் நடத்திய மனித குல விரோத நாசகரப்போரை அவர் இனிமேல் மறக்க நினைத்தாலும் அது முடியாது. காரணம் இந்தப்போர் அவரை குற்றவாளியாக உலக நாடுகளுக்கு முன்னால் நிற்க வைத்திருக்கின்றது.

ராஜபக்சே என்பவர் போர் குற்றவாளி மட்டுமல்ல, இன அழிப்பு குற்றவாளி என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ராஜபக்சே அம்பலப்பட்டப்பின் உலக நாடுகள் தமிழீழ தேசிய தலைவரை மீண்டுமாய் திரும்பிப் பார்க்க தொடங்கியிருக்கின்றன. புலிகள் வெறும் போராளிகள் அல்ல. அவர்கள் தாயகத்தின் காவலர்கள், தமிழீழத்தின் கண்மணிகள், தாய் மண் காக்க உயிர்கொடை தரும் உத்தமர்கள் என்பதை தாமதாக புரிந்துக் கொண்டாலும் உலகம் சரியாக புரிந்து கொண்டது.இப்போது தமிழீழத்தின் விடிவு கொஞ்சம் கொஞ்சமாய் பனியைப் போல் விலகி சூரியன் தெரிய துவங்கியிருக்கிறது. உலக நாடுகளின் நடுவில் அவமானப்பட்ட ராஜபக்சே தமிழர்களை மட்டுமல்ல, சொந்த மக்களையும் ஈவு இரக்கமில்லாமல் படுகொலைச் செய்யும் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகம் இப்போது உணர்ந்திருக்கிறது.

இதன்மூலம் சிங்கள பேரினவாத போக்கிற்கு உலக நாடுகள் இணைந்து முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்கமாக ஐரோப்பிய நாடுகள் ஆயத்த ஆடைக்கான அனுமதியை இலங்கை அரசுக்கு மறுத்திருக்கிறது. இன்னும் பல்வேறு நாடுகள் இலங்கையின்மீது பொருளாதாரத் தடைவிதிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவே தமிழீழத்தின் முதல் வெற்றியாகும்.இதில் சிறப்பு என்னதென்றால் இலங்கையின் பாசிச அரசு எப்படியெல்லாம் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்மையே இழக்கும் என்பதை ஒரு தொலைநோக்கோடு தேசிய தலைவர் உணர்ந்திருந்தார். அதோடு தமிழர்களின் இழப்பு என்பது தற்காலிகமானது என்பதை அவர் புரிந்து கொண்டிருந்த காரணத்தினால் முதலில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை போராட்டம் நடத்தி இனப்படுகொலையை அம்பலப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டு அரசியல் இந்திய அரசியலாக இருக்கின்ற காரணத்தினால் அது தோற்றுப் போனது. பின்னர் புலம் பெயர்ந்த தம் சொந்த உறவுகளை களம் காண உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் வெற்றியைத் தந்தது.லண்டன் மாநகரமே மூச்சுத் திணறும் அளவிற்கு தமிழ் உறவுகள் குவிந்து தம்முடைய குமுறல்களை கொட்டினார்கள். சரத்பொன்சேக நிச்சயமாய் ராஜபக்சேவிற்கு எதிர்களம் அமைப்பார் என்பதை திட்டமிட்டார்கள். அதுவும் நிகழ்ந்தது. ராஜபக்சே வெற்றி பெறுவார் என்பதை உணர்ந்திருந்தார்கள். அதுவும் நிறைவேறியது. சரத்பொன்சேக கைது செய்யப்படுவார் என்பதை அறிந்திருந்தார்கள். அதுவும் நடைபெற்றது. இப்போது ராஜபக்சேவிற்கு எதிராக சிங்கள இன மக்களே போர் முழக்கங்கள் எழுப்பப்போகிறார்கள்.

அதுவும் நடக்கத்தான் போகிறது. அப்போது ராஜபக்சேவை காப்பாற்ற இந்தியாவின் காங்கிரஸ் துரோக கும்பல் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கும்பல் மட்டுமல்ல, உலக நாடுகளின் ஆட்சியாளர்களெல்லாம் ஒன்றிணைந்து கரம் உயர்த்தினாலும் ராஜபக்சேவை காப்பாற்ற முடியாது. இந்துராம் இலங்கை ரத்தினா விருதை வாங்கி உலகெல்லாம் படம் போட்டுக் காட்டினாலும் ராஜபக்சேவை உலகம் ஒப்புக்கொள்ளாது.காரணம் அது சிங்கள மக்கள் தம்முடைய கொடுங்கோண்மை மிக்க ஆட்சியாளனுக்கு எதிராக நடத்த இருக்கின்ற போர். அப்போது வீழ்த்தப்படுவது ராஜபக்சே மட்டுமல்ல, சிங்கள பேரினவாதத்தின் அச்சாணி. இதன்மூலம் தமிழீழத்தின் தமிழ் தேசியத்தின் அடையாளம் உலகிற்கு உணர்த்தப்பட போகிறது. சிங்கள மக்களே தமிழ் தேசியத்தை அங்கீகரித்து ஆதரவு தரப்போகிறார்கள்.

இதெல்லாம் நிகழப்போகிறது என்பதை நமது தேசியத் தலைவர் உணர்ந்திருந்தார். அதுவே இப்போது தமிழீழத்தின் வெற்றியாக காட்சி அளிக்கப்போகிறது. இனி யார் தடுத்தாலும், யார் நினைத்தாலும் இதை மாற்ற முடியாது. இந்த வெற்றி தேசியத் தலைவரால் வந்த வெற்றி. இந்த வெற்றி தமிழீழ மக்களின் இழப்பு தந்த வெற்றி. இந்த வெற்றி ஈழமண்ணில் புதைக்கப்பட்ட வீரவித்துக்களில் முளைத்த வெற்றி. இந்த வெற்றி உலகையே தம் பக்கம் ஈர்க்கும் தமிழீழ வெற்றி.

Updated: June 15, 2019 — 8:27 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *